திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் இலங்கைக்கு அனுப்பி வைப்பு!!

சென்னை : திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 2022ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள். ஸ்ரீஹரன் என்ற முருகன் (நளினியின் கணவர்), சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள் என்பதால் தத்தம் வீடுகளுக்குச் சென்றனர். ஆனால், இலங்கை குடிமக்களான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய நான்கு பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களில் உடல்நலக்குறைவு காரணமாக சாந்தன் உயிரிழந்தார். இந்த நிலையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை முடிந்து விடுதலையான முருகன், லண்டன் செல்ல விசா எடுக்க அடையாள அட்டை வழங்குமாறு மறுவாழ்வு இயக்குனருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. ஒரு வாரத்தில் ஒன்றிய அரசு அனுமதி அளித்தவுடன் அனுப்பி வைக்கப்படுவார்கள்,” என்று தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில், ஒன்றிய அரசு அனுமதி அளித்ததை அடுத்து, திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன் உள்பட 3 பேரும் காவல்துறை வாகனம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னை வருகை தந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது