சிம்ம ராசிக்காரர்களின் இல்லக்கனவை நனவாக்கும் முருகன்

உயிர்கள் அனைத்திற்கும் ஆதாரமான சூரியனே சிம்ம ராசியை ராஜபோகமாக ஆளுகிறார். இந்த ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலானோருக்கு பரம்பரை சொத்து அமையும். உங்களின் வீட்டைப்பற்றி நிர்ணயிக்கும் இடத்திற்கு செவ்வாய்தான் அதிபதியாக வருகிறார். அவரும் சூரியனுக்கு நட்பாகத்தான் வருகிறார். எனவே, எப்படியும் உங்களுக்கு வீட்டு யோகம் உண்டு. சொந்த ஜாதகத்தில் செவ்வாயும், சுக்கிரனும் பலமிழந்து இருந்தால் மட்டுமே தாமதம் ஏற்படும். வீடு விஷயத்தில் உங்களைக் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லலாம். ஏனெனில், கட்டிட ஸ்தானாதிபதியும், பிரபல யோகங்களையும், வசதி வாய்ப்புகளையும் தரக்கூடிய வீடான ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியாக சுக்கிரனே வருகிறார். இளம் வயதிலேயே வீடு, சொத்து சுகங்கள் இருக்கும். பூர்வீக சொத்தும் கிடைக்கும்.

பொதுவாக வீடு, நிலத்தைப் பற்றிப் பேசுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ‘‘மெயின் ரோட்ல இருக்கற இந்த இடத்துல கல்யாண மண்டபம் கட்டினா நல்லா இருக்கும்’’ என்று அபிப்ராயம் சொல்லத் தயங்க மாட்டீர்கள். இருப்பதிலேயே நல்ல இடம் எதுவோ, அதைத்தான் நீங்கள் சொல்வீர்கள். பரம்பரை பணக்காரர்கள், சொத்துக்கள் உள்ளோர்தான் உங்களுக்கு நண்பர்களாகவும் இருப்பார்கள்.

எவ்வளவுதான் சொத்து பற்றிப் பேசினாலும், கட்டிடங்களை ரசித்தாலும் பெரிதாக வாங்கிக் குவிக்கும் ஆசை இருக்காது. எப்போதோ நாலு இடம் வாங்கிப் போட்டிருப்பீர்கள். அதை உடனே விற்பீர்கள். அதனாலேயே நறுக்கென்று நாலு சொத்துக்கள் இல்லாது வாழ்க்கையின் பிற்பகுதியில் தவிப்பீர்கள். பொதுவாகவே சிம்ம ராசிக்காரர்களுக்கு கையில் பணம் இருக்கும்போது ஏனோதானோ என்று செலவு செய்வீர்களே தவிர, தொலைநோக்குப் பார்வையில் வீடு, நிலமெல்லாம் வாங்கிப்போடத் தெரியாது. சிம்ம ராசிக்கு சூரியன் அதிபதியாக வருவதால், அரசாங்க அலுவலகங்கள், தலைவர்களின் சிலைக்கு அருகில் வீடு அமைந்தால் நல்லது. நீங்கள் வசிக்கும் வீடு ஊரின் கிழக்குப் பகுதியாக இருந்தால் அபரிமிதமான அதிர்ஷ்டம் தரும்.

சிம்ம ராசிக்குள் மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் நட்சத்திரங்கள் வருகின்றன. அதில் முதலில் மகம் நட்சத்திரத்தைப் பற்றிப் பார்ப்போம். இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் பெண்கள்தான் வீட்டு விஷயத்தில் பெரிதும் ஆர்வம் காட்டுவார்கள். ‘‘எனக்கு எல்லாமே செட்டா இருக்கணும்’’ என்பார்கள். அதாவது சொந்த வீடு, கார், நிலம் என்று தனக்கே தனக்காக இருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். அடிக்கடி வீடு மாற்றுவது பிடிக்காது. நகரத்தின் பிரதான இடத்தில் குறைந்தது எழுநூறு சதுர அடியிலாவது வீடு இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவீர்கள். ஆரம்பத்தில் சிறிதாக லோன் போட்டு வீடு கட்டுவீர்கள். போகப் போக பக்கத்து இடம் ஏதாவது விலைக்கு வருகிறதா என்று பார்த்து வாங்குவீர்கள். சகோதரன் அல்லது சகோதரிக்கு சேர வேண்டிய பரம்பரை சொத்துக்கள் சில முரண்பாடான சூழ்நிலையில் உங்களுக்கு வந்து சேரும்.

வீடு கட்டுவதற்கான எல்லா மெட்டீரியல்ஸையும் உயர் தரமாகவே வாங்குவீர்கள். அரசு வங்கிக் கடன் கிடைக்கும். கலப்பு மண் அதிகமுள்ள நிலமாக இருப்பின் நல்லது. அல்லது செம்மண் நிறமாக இருந்தாலும் பரவாயில்லை. பத்திர விஷயங்களில் கவனமாக இருங்கள்.

உங்கள் ராசிநாதன் சூரியன். நட்சத்திரத்தின் அதிபதி கேது. இந்த இரண்டும் இணைந்த அமைப்பு கிரகணத்தைக் காட்டுகிறது. எனவே, சில விஷயங்கள் உங்கள் கண்ணை மறைக்கும். யாரேனும், ‘‘அடுத்த வருஷம் இந்த இடத்துக்கு பக்கத்துல இருநூறு அடி ரோடு வரப்போகுது. அளந்துட்டுப் போயிட்டாங்க’’ என்றால் உடனே நம்பி விடாதீர்கள். விசாரித்து வாங்குங்கள்.

சிறு தொழிற்சாலை, வெல்டிங், லேத் கம்பெனி, மெக்கானிக் ஷெட் போன்றவை வீட்டுக்கு பக்கத்தில் இருக்காது பார்த்துக் கொள்ளுங்கள். கிழக்கு, வடகிழக்கு, தெற்கு திசைநோக்கி வீட்டின் தலைவாசல் இருப்பது நல்லது. மேலும், ஊரின் இந்த திசைகளிலேயே வீடு இருப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சிறிய வயதிலேயே சுக்கிர தசை நடப்பதால் 27 வயதுக்குள் வீடு அமையும். சென்ட்டிமென்டாக ஒரு சொத்தை உங்கள் பெயரில் வைத்துக் கொண்டு மற்ற சொத்துக்களை வாழ்க்கைத் துணையின் பெயரிலோ, பிள்ளைகளின் பெயரிலோ எழுதி வைப்பது நல்லதாகும். மேலும், உங்களின் ஏழரைச் சனியின்போது சொத்துக்களை உங்கள் பெயரில் வாங்காமல் இருப்பது நல்லது. அபார்ட்மென்ட் என்றால் எல்லா மாடிகளுமே ஏற்றது. புதுமனை புகுவிழா, பத்திரப் பதிவு செய்தலை ரோகிணி, அஸ்தம், சுவாதி, அனுஷம் போன்ற நட்சத்திரங்களில் வைத்துக் கொள்வது வளத்தைப் பெருக்கும்.

இனி பூரம் நட்சத்திரத்தைப் பார்ப்போம். கட்டிடகாரகனான சுக்கிரன்தான் பூரத்தை ஆட்சி செய்கிறார். எனவே, வீடு வாங்கியே தீர வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். ஆனால், தினசரி சுகங்கள் அதனால் குறைந்துவிடக்கூடாது என்று நினைப்பீர்கள். ‘‘ஏகப்பட்ட லோனை வாங்கிட்டு பண்டிகையைக்கூட பார்த்துப் பார்த்து கொண்டாட வேண்டியிருக்கு’’ என்று புலம்புவீர்கள். பூரத்தில் பிறந்த ஆண்களுக்கு வீடு சீக்கிரமாக அமைந்து விடுகிறது. பெண்களுக்குத்தான் தாமதமாகிறது. எப்போதுமே நகரத்திற்கு வெளியே வளர்ந்து வரும் வலிமையான பகுதியில்தான் வீடு வாங்க யோசிப்பீர்கள். ‘‘இங்கதான் தண்ணி மினரல் வாட்டர் மாதிரி கிடைக்குது. வீடுன்னா தண்ணியும் காத்தும்தான் ரொம்ப முக்கியம்’’ என்பீர்கள். டூ வீலர் வைத்திருந்தாலும் கார் பார்க்கிங் இருக்கும் வீடாகப் பார்த்து வாங்குவீர்கள். வசிக்கும் இடம் அதிக நெரிசலாக இருப்பதை விரும்ப மாட்டீர்கள். தனி வீடாக இருந்தால் மிகவும் பிடிக்கும். அதனாலே தொகுப்பு வீடுகளுக்கு அருகில் இடம் வந்தால் வேண்டாம் என்று மறுத்து விடுவீர்கள்.

‘‘ஹால்ல உட்கார்ந்து இருவது பேராவது சாப்பிடணும்’’ என்று திட்டமிட்டு கூடத்தை அமைப்பீர்கள். முக்கிய விஷயங்களின் முடிவுகளை மொட்டை மாடியில் நின்றுதான் யோசிப்பீர்கள். ஏனெனில், சூரியன் உங்களுக்கு உதவுவார். உங்கள் வீட்டிற்கு அருகே பூக்கடை, கார் ஷோரூம், பல்பொருள் அங்காடி, ஸ்டார் ஹோட்டல், லாண்டரி கடை இருந்தால் நல்லது. அடுக்குமாடியில் எல்லா தளங்களுமே உங்களுக்கு நல்லதுதான்.

உங்கள் சொந்த ஜாதகத்தில் சுக்கிரன் சரியில்லை எனில் பூர்வீகச் சொத்துக்கள் நிலைக்காது. அப்படி ஏதாவது இருந்தால் விற்க வேண்டுமென நினைப்பீர்கள். பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டைக்கூட திடீரென்று விற்கத் துணிவீர்கள். அதனால் அவசரப்படாமல் இருங்கள். மணலும், செம்மண்ணும் கலந்த கலவையாக இருக்கும் மண் ஏற்றது. மேலும் சிக்கிமுக்கி கற்களும், கூழாங்கற்களும் மிகுந்து காணப்படும் நிலம் அமைந்தால் இன்னும் நல்லது.

அஸ்வினி, புனர்பூசம், சித்திரை, மூலம், உத்திராடம் போன்ற நட்சத்திரங்களில் புதுமனை புகுவிழாவையும், பத்திரப்பதிவையும் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டின் தலைவாசலை தெற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு திசையில் அமைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் வசிக்கும் ஊரின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் வீடு அமைந்தால் நலம்.

சிம்மராசிக்குள் மூன்றாவதாக உத்திரம் 1ம் பாதம் வருகிறது. ராசிக்கு அதிபதியாகவும், நட்சத்திரத்திற்கு அதிபதியாகவும் சூரியனே வருகிறது. அதனால் கொஞ்சம்கூட வளைந்து கொடுக்க மாட்டீர்கள். ‘‘கொஞ்சம் அந்த மேனேஜரை புகழ்ந்து பேசியிருந்தீங்கன்னா லோன் பேப்பர்ல கையெழுத்து போட்டிருப்பாரு’’ என்று வாழ்க்கைத்துணை புலம்புவார்.

உங்கள் ராசியின் கட்டிட ஸ்தானாதிபதியான செவ்வாய் உங்களுக்கு அதிநட்பாக வருவதால் வீடு, மனை நிச்சயம் உண்டு. ‘எப்படியாவது வீடு வாங்கியே தீர வேண்டும்’ என்று நினைக்கமாட்டீர்கள். நீங்கள் எவ்வளவு சேர்த்தாலும் ஏதோ ஒருவழியில் அது செலவாகிவிடும். ஆனால், அது இடமாக மாறாது. குழந்தைகளுக்காக இருக்கும். நாற்பது வயதில்தான் வீடு கைகூடும். பக்காவாக எல்லாவற்றையும் சரிபார்த்தபிறகே வாங்குவீர்கள். பெரிய இடம், நிறைய இடத்தையெல்லாம் விரும்ப மாட்டீர்கள். தேவையில்லாமல் ஒரு அறையைக்கூட கட்ட மாட்டீர்கள். அரசாங்க வங்கிக் கடன் உடனே கிடைக்கும். தனியார் வங்கிக் கடனை இரண்டாம் பட்சமாக வையுங்கள்.

அபார்ட்மென்ட்டின் எல்லா தளங்களும் உங்களுக்கு சரியாக வரும். வீட்டின் தலைவாசலை எப்போதும் கிழக்கு, தெற்கில் வைத்துக் கட்டுங்கள். மேற்கு பார்த்த திசை கூடாது. ஊரின் கிழக்குப் பக்கமாக வீடோ, நிலமோ வந்தால் வாங்கிவிடுங்கள். உங்களுக்கு எல்லாவித மண்ணும் நல்லதேயாகும். கண் மருத்துவமனை, சித்த வைத்திய சாலை, யோகா சென்டர், அரசு அலுவலகங்கள் போன்றவற்றிற்கு அருகில் வீடு அமைந்தால் நல்லது. ரோகிணி, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம் போன்ற நட்சத்திரங்களில் கிரகப் பிரவேசம், பத்திரப் பதிவு வைத்துக் கொள்ளுங்கள்.

சிம்ம ராசிக்கு நான்காம் இடமாக, அதாவது வீட்டு யோகத்தைத் தரும் இடமாக, விருச்சிக ராசி வருகிறது. அந்த ராசிக்கு அதிபதியாக செவ்வாய் வருகிறார். பொதுவாகவே செவ்வாய்க்கு அதிபதியாக முருகன் வருகிறார். எனவே முருகனை தரிசிப்பது மிகவும் அவசியமாகும். அப்படி நீங்கள் தரிசிக்க வேண்டிய தலமே கந்தன்குடி ஆகும். இத்தலம் முருகனை மணக்க விரும்பி தெய்வானை தவமிருந்த தலமாகும். வேறெங்கும் இல்லாத அற்புதமாக தனிச் சந்நதியில் தெய்வானை மட்டும் அருள்கிறாள். கோயிலின் கருவறையில் வள்ளி, தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி ஆனந்தமாக வீற்றிருக்கிறார். இது என்னுடைய இடம் என்று மிகுந்த உரிமையோடு கந்தன் குடி கொண்டிருக்கிறான். அதனால்தான் கந்தன்குடி என்றாயிற்று. சிம்ம ராசிக்காரர்கள் இங்கு வணங்கினால் இல்லக் கனவு நிறைவேறும். கும்பகோணம் – காரைக்கால், மயிலாடுதுறை – காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் கொல்லாபுரத்தை அடுத்து கந்தன்குடி உள்ளது.

Related posts

புண்ணியங்களைப் புரட்டித் தரும் புரட்டாசிமாதம்

தேரழுந்தூர் தேவாதிராஜன்

பாரளந்த பெருமானின் புகழ்பாடும் புரட்டாசி!