முரசொலி மாறன் பூங்காவில் ரூ.5.75 கோடியில் அறிவியல் பூங்கா: மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு: சென்னை மாநகராட்சியின் 289 குப்பை அகற்றும் வாகனங்களில் ரூ.1.31 கோடியில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி, ஜிஆர்எஸ் தொழில்நுட்பத்தில் 3 ஆண்டுகளுக்கு கண்காணிக்கப்படும்.

மாநகராட்சியின் 4, 5, 9, 12 ஆகிய மண்டலங்களில் 16 இடங்களில் ரூ.26.60 கோடியில் நடைபயிற்சி பாதைகள் அமைக்க தயாரிக்கப்பட்ட திட்ட மதிப்பீட்டுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கொளத்தூர் புதிய தாலுகாவாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தாலுகா அலுவலகமானது மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டிடத்தில் 2 ஆண்டுகள் வாடகை அடிப்படையில் வழங்க அனுமதிக்கிறது. வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் ரூ.176 கோடியில் பாலம் கட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட மதிப்பு ரூ.195 கோடியாக உயர்த்தப்பட்டதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற அவ்வை நடராசனின் வாழ்நாள் சாதனைகளை பெருமைப்படுத்தும் வகையில், அவர் வசித்து வந்த தாரகை இல்லம் அமைந்துள்ள அண்ணா நகர் கிழக்கு 2வது முதன்மைச் சாலைக்கு அவ்வை நடராசன் முதன்மை சாலை என பெயர் சூட்ட அரசாணை பெறப்பட்ட நிலையில் அதற்கு மன்றம் அனுமதி வழங்குகிறது. கண்ணப்பர் திடல் பகுதிகளில் வசித்து வரும் அடையாளம் காணப்பட்ட 114 குடும்பங்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கு பயனாளி பங்கு தொகை செலுத்த வேண்டும். அந்த பங்கு தொகையில் 3-ல் ஒரு பங்கை பயனாளியும், 2 பங்கை மாநகராட்சி நிர்வாகம் செலுத்த மன்றம் அனுமதிக்கிறது. மணலி மண்டலத்தில் உள்ள பர்மா நகர், கன்னியம்மன்பேட்டை விநாயகர்புரம், மாதவரம் மண்டலத்தில் உள்ள பாரதியார் தெருவில் உள்ள எரிவாயு தகனம் மேடை, 32வது வார்டில் உள்ள எரிவாயு தகன மேடை, கொரட்டூரில் உள்ள எரிவாயு தகனமேடை, கொரட்டூர் சி.டி.எச் சாலையில் உள்ள எரிவாயு தகனமேடை ஆகியவற்றை சீரமைக்க ரூ.10.39 கோடி ஒதுக்க அனுமதி வழங்கப்படுகிறது.

சென்னை மாநகர பகுதியில் ரூ.9.45 கோடி செலவில் ஆண்டுக்கு 50 ஆயிரம் நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு செய்யும் திட்டத்துக்கும் இந்த மன்றம் அனுமதிக்கிறது. சென்னை மாநகரில் ரூ.8.46 கோடியில் 81 இடங்களில் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்க இந்த மன்றம் ஒப்புதல் அளிக்கிறது. சென்னை மாநகராட்சி முழுவதும், வாகனங்களில் சென்று கொசு மருந்து அடிக்க ரூ.2.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மண்டலம் 4, 8 ஆகியவற்றில் குப்பை சேகரிக்கும் பணியை தனியாருக்கு வழங்க ஒப்பந்தப் புள்ளி கோர முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள மண்டலங்களில் குப்பை சேகரிக்கும் பணியை 4 ஆண்டுகள் கண்காணிக்க ரூ.19.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெரம்பூரில் உள்ள முரசொலி மாறன் பூங்கா, சிறந்த இயற்கை சூழலுக்கு பெயர் பெற்றது. மேலும் மாதவரம், கொளத்தூர், வில்லிவாக்கம், அயனாவரம், செம்பியம் மற்றும் அகரம் ஆகியவற்றை உள்ளடக்கிய அதன் சுற்றுப்புறங்களில் இருந்து தினமும் ஏராளமான மக்களை ஈர்த்து வருகிறது. இந்நிலையில், பெரம்பூர் முரசொலி மாறன் பூங்காவில் அறிவியல் பூங்கா ரூ.5.75 கோடியில் அமைக்க தயாரிக்கப்பட்ட திட்டமதிப்புக்கு சென்னை மாநகராட்சி மாமன்றம் அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்