திருமங்கலம் அருகே முனியாண்டி சுவாமி கோயில் அன்னதான விழா


* ஆயிரக்கணக்கான பெண்கள் மலர்தட்டு எடுத்து ஊர்வலம்
* 100 கிடாக்கள், 300 கோழிகளை பலியிட்டு கமகம கறி விருந்து

திருமங்கலம்: திருமங்கலம் அருகே, பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி கோயில் அன்னதான விழா 2 நாட்கள் வெகுவிமரிசையாக நடந்தது. இதையொட்டி நேற்று மாலை ஆயிரக்கணக்கான மலர்தட்டு எடுத்து ஊர்வலமாக வந்தனர். 100 கிடாக்கள், 300 கோழிகளை பலியிடப்பட்டு இன்று பொதுமக்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி கோயில் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் சார்பில், இந்த கோயிலில் 57வது அன்னதான விழா நேற்று தொடங்கி 2 நாள் நடந்தது.

நேற்று மாலை 5 மணியளவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கிராமத்தின் முக்கிய வீதி வழியாக மலர் தட்டுக்களில் தேங்காய், பழம், மாலைகளை தலையில் சுமந்தவாறு ஊர்வலம் வந்தனர். பின்னர் கோயில் முன்பு அமர்ந்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். முனியாண்டி சுவாமிக்கு பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், தயிர், மஞ்சள், எலுமிச்சை உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முனியாண்டி சுவாமி கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்பு கோயில் வளாகத்தில் உள்ள காவல் தெய்வமான கருப்பசாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

நேற்றிரவு 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு சைவ உணவு வழங்கப்பட்டது. இன்று காலை 100 கிடாக்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டு அசைவ உணவு தயாரித்து பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்துபவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்