நகராட்சி அலுவலகம் முற்றுகை அறிவிப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் போராட்டம் நிறுத்தி வைப்பு

பந்தலூர் : நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக திரண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்குகள், நடைபாதை உள்ளிட்ட வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக திரண்டவர்களை அதிகாரிகள் தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை நெல்லியாளம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூடலூர் கோட்டாட்சியர் முகமது குதரதுல்லா தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன், நகர்மன்ற தலைவர் சிவகாமி, பணி மேற்பார்வையாளர் சிவபாக்கியம், பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளர் ராசி ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து ஆணையாளர் குமரி மன்னன் பேசுகையில், ‘‘நெல்லியாளம் நகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்போம்’’ என்றார். இந்நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்ததால் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெரிவித்தனர். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?