கோவில் நிர்வாக பொறுப்பில் பிரச்னை செய்வதாக பேரூராட்சி கவுன்சிலர் கலெக்டரிடம் புகார்

திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சியில் கோயில் நிர்வாக பொறுப்பில் ஒரு பிரிவினர் பிரச்னை செய்வதாக பேரூராட்சி கவுன்சிலர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். திருமழிசை பேரூராட்சியில் கோயில் நிர்வாக பொறுப்பில் ஒரு பிரிவினர் பிரச்னை செய்வதாக பேரூராட்சி கவுன்சிலர் ராஜேஷ் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: பூந்தமல்லி வட்டம், திருமழிசை பேரூராட்சி, பிராயம்பத்து பகுதியில் தேவி இளங்காளியம்மன், தேவி எல்லையம்மன் ஆலயம், செல்வ விநாயகர் ஆலயம் ஆகிய ஆலயங்கள் உள்ளது. இந்த ஆலயங்கள் அனைத்தையும் கடந்த 60 ஆண்டு காலமாக வன்னியர் குல சத்திரியர் நிர்வகித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒரு சிலர் பிரச்னையை ஏற்படுத்தி அவர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என்ற பொய்யான வதந்தியை பரப்பி வருகின்றனர். இந்நிலையில், பிரயாம்பத்து காலனி மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலும், சகோதரத்துவத்தை பேணி காக்கும் வகையிலும் ஆடி மாத திருவிழாவின் போது முதல் நிகழ்ச்சியான வடை பொங்கல் நிகழ்ச்சியில் முதலில் பொங்கல் வைக்கவும், மேலும் அம்மனுக்கு சந்தன காப்பு செலுத்துவதற்கான உரிமையும் அவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தீமிதி திருவிழாவின் முக்கிய அம்சமாக கருதப்படும் காப்பு கட்டி, தீ மிதிக்கவும் அனைவரும் இணைந்து செயல்பட்டு வருகின்றோம்.

அதேபோல் கடைசி நாள் அம்மன் தாய் வீடு செல்லும் நிகழ்ச்சியாக அவர்கள் பகுதிக்கு சென்று வருகிறது. இந்நிலையில், கோயிலை நிர்வாகம் செய்ய கோயில்களை உருவாக்கியவர்களுக்கு மட்டும் தான் உரிமை உள்ளது. வேறு யாரும் நிர்வாகம் செய்ய உரிமை கோர முடியாது. அதே நேரத்தில் இந்த பகுதியில் மேலும் பல்வேறு கோயில்கள் இருக்கின்றன. அதில் நிர்வாக பொறுப்பு கேட்டு நாங்கள் யாரும் செல்ல இயலாது. காரணம் இதே பகுதிக்கு உட்பட்டு இருப்பினும் நாங்கள் அந்த கோயில்கள் உருவாவதற்கு எதுவும் செய்யவில்லை. அதனால், கோயில் உருவாக்க காரணமானவர்கள் நிர்வாகத்தை கவனிக்கின்றனர்.

அவரவர் உருவாக்கும் கோயில்களுக்கு அவரவர் நிர்வாகம் பார்க்க வேண்டும் என்கிற நியாயமான எண்ணமே உள்ளது. அதேபோல், இங்கு ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியே கோயில்கள் உள்ளது. அதன் அடிப்படையில் பிரயாம்பத்து ஆதிதிராவிடர் குடியிருப்பு, எம்ஜிஆர் நகர், பஜனை கோயில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் அவர்களுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது. நிர்வாக பொறுப்பில் வேறு யாரும் தலையிட உரிமை இல்லை. எனவே, பிரயாம்பத்து காலனி மக்களையும் ஒருங்கிணைத்து சகோதரத்துவ அடிப்படையில் செல்ல வேண்டும் என்பதற்காக மேற்கண்ட உரிமைகளை அளித்து சகோதரத்துவமாக பாதுகாத்து வருகிறோம் என அந்த புகார் மனுவில் இவ்வாறு கூறியுள்ளனர்.

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!