மும்பை தாக்குதல் சதி திட்டத்தில் ஈடுபட்ட பாக்.தொழிலதிபர் தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவு: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வாஷிங்டன்: மும்பை தாக்குதல் குற்றத்திற்காக பாகிஸ்தானை சேர்ந்த தஹாவூர் உசேன் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பை நகருக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் தாஜ் ஓட்டல், ஒபேராய் ஓட்டல்,நரிமன் இல்லம், சிஎஸ்எம்டி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். நாட்டை யே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் 6 அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.

தாக்குதலில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற ஒரு தீவிரவாதி மட்டும் பிடிபட்டான். பின்னர் அவன் தூக்கிலிடப்பட்டான். மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை சேர்ந்தவரும் கனடா குடியுரிமை பெற்றவருமான தஹாவூர் உசேன் ராணா(63) என்பவரை கடந்த 2009ல் அமெரிக்க போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து இவர் சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தஹாவூர் ராணா கலிபோர்னியா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்தியா- அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்தில் உள்ள ஒரு விதி அவரை நாடு கடத்தலில் இருந்து பாதுகாக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்ட குற்றங்களை செய்ததற்கான ஆதாரங்களை நிரூபிக்க இந்தியா தவறி விட்டது என்று தஹாவூர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த நிலையில், இந்திய- அமெரிக்க ஒப்பந்தத்தின் கீழ் தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

Related posts

மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க குழு

கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவத்துறை 545 விருதுகள் பெற்று சாதனை: தமிழக அரசு

வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி