முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துவரும் நிலையில் பராமரிப்பு பணிகள் குறித்து ஒன்றிய நீர்வள துணைக் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

தேனி: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துவரும் நிலையில் பராமரிப்பு பணிகள் குறித்து ஒன்றிய நீர்வள துணைக் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு நடத்தினர். நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்துள்ளது. கடந்த 6-ம் தேதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.85 அடியாக இருந்த நிலையில் தற்போது 131.30 அடியாக உயர்ந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணைக்கு வினாடிக்கு 1052 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையில் பருவகாலங்களின்போது ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்துப் பராமரிக்க, மூவர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்த மூவர் குழுவுக்கு உதவியாக, 5 போ் கொண்ட துணைக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 131 அடியாக உயர்ந்து உள்ள நிலையிலும், வடகிழக்கு பருவமழை பெய்து வருவதன் காரணமாகவும் மத்திய நீர்வளத் துணைக் கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு செய்வதற்காக திட்டமிட்டனர்.

அதன் அடிப்படையில், மத்திய நீர்வள துணைக் கண்காணிப்புக் குழுவின் தலைவரான நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ்குமார், தமிழக பிரதிநிதிகளான பெரியாறு சிறப்புக் கோட்டச் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார் மற்றும் கேரள அரசின் பிரதிநிதிகளான கட்டப்பனை நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் அனில் குமார், உதவிப் பொறியாளர் அருண் ஆகியோர் கொண்ட குழுவினர் அணைப் பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம் மற்றும் மதகு பகுதியில் நீர்கசிவு குறித்து ஆய்வு செய்தனர். பிரதான அணை, பேபி அணை, கேலரி பகுதி, மதகுப் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்புக்குழு ஆய்வு செய்தது.

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்