முல்லைப் பெரியாறு பிரதான வழக்கு ஆகஸ்ட் 7 முதல் 3 நாட்கள் விசாரணை: உச்ச நீதிமன்றம் அதிரடி முடிவு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் கொள்ளளவு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிரதான மனு ஒன்று கடந்த 2022ம் ஆண்டுய் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அணை பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் முல்லைப் பெரியாறில் பராமரிப்பு பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் மேற்கொள்ள மாற்றி அமைக்கப்பட்ட அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவிட வேண்டும். அதேப்போன்று முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தும் வகையில் நிலுவையில் உள்ள பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்க கேரளத்துக்கு உத்தரவிட வேண்டும்.

பேபி அணையை பலப்படுதல் பணிக்காகவும், முல்லை பெரியாறு பிரதான அணையில் சிமென்ட் கலவை பூசுவதற்கும், அணையில் இடது பகுதி உபரி நீர் மதகை சரி செய்வதற்கும், நிலநடுக்கங்களை கண்டறியும் “சீஸ்மிக்” உபகரணத்தை அமைக்கவும் மற்றும் வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒத்துழைப்பும், உரிய அனுமதியை தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டும். மேலும் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர் வரத்தை கண்டறியும் உபகரணத்தை கேரள அரசு அமைக்க வேண்டும்.முல்லைப் பெரியாறில் புதிய படகுகளை பயன்படுத்தவும், தேக்கடியில் உள்ள அறைகளை சீரமைக்கவும் தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பின் பிரதான மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரதான வழக்கை எப்போது விசாரிக்கலாம் என நேற்று உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் சட்ட ரீதியான ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து முடிவில் வரும் ஆகஸ்ட் 7,8 மற்றும் 9ம் தேதிகளில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான தமிழ்நாடு அரசின் பிரதான வழக்கை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் மாதம் நடத்தப்படும் விசாரணைக்கு பின்னர் தமிழ்நாடு அரசின் பிரதான மனுவின் கோரிக்கை ஏற்கப்படுமா அல்லது அதில் உச்ச நீதிமன்றம் ஏதேனும் சில பரிந்துரைகளை வழங்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து தெரியவரும்.

Related posts

கர்நாடகாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

2019 நீட் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் என்.டி.ஏ.வுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

கர்நாடகாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு