முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துவது பற்றி கண்காணிப்பு குழுவினர் ஆய்வு: மதகுகள் இயக்கம், கசிவு நீர் குறித்து திருப்தி

கூடலூர்: முல்லை பெரியாறு அணையில் கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அணையின் நீர்மட்டத்தை உயர்த்த, பேபி அணையை பலப்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வு செய்தனர். முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில், அணையை கண்காணித்து பராமரிக்க, அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவினர் தலைவர் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளரும், அணைகள் பாதுகாப்பு அதிகாரியுமான ராகேஷ் காஷ்யப் தலைமையில் நேற்று அணையில் ஆய்வு செய்தனர். மெயின் அணையில் அணைப்பகுதியில் நிலநடுக்கத்தை பதிவு செய்ய வைத்துள்ள சீஸ்மோகிராப் கருவியை பார்வையிட்டனர். தொடர்ந்து கேலரி பகுதியில் அணையின் சீப்பேஜ் வாட்டர் (கசிவுநீரை) கணக்கிட்டபோது, அணையின் கசிவுநீர், நீர்மட்டத்திற்கு மிக துல்லியமாக இருந்தது.

இதையடுத்து மதகுப்பகுதிக்குச் சென்ற குழுவினர், 13 மதகுகளில் மூன்று மதகுகளை இயக்கிப்பார்த்தனர். மதகுகளின் இயக்கமும் சீராக இருந்தது. இதையடுத்து பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ள வெட்டப்பட வேண்டிய மரங்கள் குறித்து, தமிழக அதிகாரிகள் கொடுத்திருந்த அறிக்கையின் அடிப்படையில், பேபி அணையில் பணிகள் செய்யவேண்டிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது கண்காணிப்பு குழுவினருடன் மத்திய நீர்வள ஆணைய அணை பாதுகாப்பு கண்காணிப்பு இயக்குநர் ராகேஷ் குமார் கவுதம், துணை இயக்குநர் அஜித் கட்டாரியா, அணை கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின் மற்றும் இரு மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் இருந்தனர். இதையடுத்து கண்காணிப்பு குழுவினரின் ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலை தேக்கடியில் நடைபெற்றது.

Related posts

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் : 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை இறுதிச்சுற்றுக்கு தகுதி

மேட்டூர் அணையில் நீர் திறப்பு; டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் லீக் போட்டி: இந்தியாவின் பி.வி. சிந்து வெற்றி!