முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைப் பேச்சு ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியை கண்டித்து 24ம் தேதி உண்ணாவிரதம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

கம்பம்: முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சையாக பேசிய, பாஜ ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபியை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் வரும் 24ம் தேதி உத்தமபாளையத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து கேரளாவில் தொடர்ந்து, தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொய் பிரசாரம் செய்யும் கேரள அரசியல் கட்சியினர் மற்றும் யூடியூபர்களை கட்டுப்படுத்தக்கோரியும் கடந்த 12ம் தேதி, தேனி மாவட்டம், கூடலூர் அருகே, லோயர்கேம்பில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கிடையே, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜ ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, ‘‘முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பேற்பது?’’ என சர்ச்சையாக கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு தமிழக விவசாயிகளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து முல்லை பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், ‘‘அணை தொடர்பாக கேரள அரசியல் கட்சியினரின் ஆதாரமற்ற பேச்சுக்கள் தொடர்கின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முல்லை பெரியாறு – வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், வரும் 24ம் தேதி தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்