குமரியில் குளங்களில் மண் எடுப்பு; பறக்கும்படை அமைத்து கண்காணிக்கப்படுமா?.. முறைகேடாக விற்பனை நடப்பதாக புகார்


நாகர்கோவில்: குமரியில் விவசாயிகள் போர்வையில் குளங்களில் இருந்து மண் எடுக்கப்பட்டு, முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 417 குளங்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, பஞ்சாயத்து ராஜ் கட்டுப்பாட்டில் உள்ள 192 குளங்கள் என மொத்தம் 609 குளங்களிலிருந்து இலவசமாக மண் எடுக்கும் வகையில் சிறப்பு ஆணை கடந்த ஜூலை மாதம் அப்போதைய மாவட்ட கலெக்டர் தரால் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பதாரர்கள் tnesevai.tn.gov.in என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பித்து சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட நீர்நிலைகளின் கட்டுப்பாட்டு அலுவலர் முன்னிலையில் வண்டல்மண் மற்றும் களிமண் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.

சம்பந்தப்பட்ட தாசில்தார்கள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மற்றும் துணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆகியோரை அணுகி விபரங்களை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. வண்டல் மண், களிமண் தூர்வாரி எடுத்து செல்லப்பட வேண்டிய கண்மாய், ஏரி, குளம் அமைந்துள்ள கிராமம் ஆகியவை அதே தாலுகாவில் அமைந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் கிராம கணக்கு பதிவேட்டின்படி வேளாண் நிலத்தின் வகைப்பாடு, அனுமதி கோரும் வண்டல் அல்லது களிமண் அளவு, குத்தகை உரிமம் பெற்று விவசாய பணி மேற்கொள்ளப்பட்டால் அதன் விபரம் ஆகியவை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று ஆன்லைன் வழியாக சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் சமர்ப்பித்து இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டு இருந்தது. இலவச அனுமதி நடைச்சீட்டு, பொதுப்பணித்துறையால் வழங்கப்பட்டது.

நீர் நிலைகள் முறையாக பாதுகாக்கப்பட வேண்டும். மண் எடுத்து தூர்வாரப்படும் போது நீர் நிலைகள் ஆழமாகும். நீர் அதிகளவில் தேக்கம் பெறும். மேலும் வண்டல் மண் விவசாய நிலங்களை மேன்மைப்படுத்தும் என்பதால் இந்த திட்டத்தை விவசாயிகள் வரவேற்றனர். இந்த நிலையில் குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுத்து செல்வதற்கு அனுமதி பெற்ற நபர்கள் சிலர், அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட புல எண் கொண்ட நிலத்துக்கு மண் எடுத்து செல்லாமல், தனியாருக்கு விற்பனை செய்கிறார்கள். மேலும் அனுமதி பெற்ற அளவை விட, அதிகளவில் குளங்களில் இருந்து அதிக யூனிட் மண் எடுப்பதாகவும் கூறப்படுகிறது. இதை கண்காணிக்க வேண்டிய தாசில்தார் நிலையிலான அதிகாரிகள் கண்டு கொள்ள வில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இது தொடர்பாக குமரி மாவட்ட நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி. கதிர்வேல் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளார். அதில், விவசாய நிலங்களை மேன்மைப்படுத்தும் வகையில் வண்டல் மண் எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் விதிமுறைகளை மீறி குளங்களில் இருந்து வண்டல் மண், களிமண் எடுக்கப்பட்டு விவசாய நிலங்களில் கொட்டாமல், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு கைமாற்றி விடப்படுகிறது. யூனிட் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து அதிகளவில் தனிப்பட்ட நபர்கள் சிலர் சம்பாதித்து வருகிறார்கள். விவசாய நிலத்துக்கு மண் எடுக்க என அனுமதி பெற்று விட்டு, மணல் கொள்ளையர்களுக்கு கைமாற்றி விடப்படுகிறது. வருவாய் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் நீர் வளத்துறை அலுவலர்கள் போன்ற அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.

மாறாக புகார் செய்யும் நபர்கள் குறித்த விபரங்களை மணல் கொள்ளையர்களுக்கு தெரிவித்து விடுகிறார்கள். எனவே குமரி மாவட்டத்தில் விவசாய நிலத்துக்கு மண் எடுத்து செல்வதற்கு அனுமதி பெற்ற நபர்கள் , விவசாய நிலத்தில் தான் மண்ணை கொட்டுகிறார்களா? வேறு இடத்துக்கு கொண்டு செல்கிறார்களா? என்பதை உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார். விவசாயிகள் கூறுகையில், முறைகேடாக மண் எடுக்க அதிகாரிகள் சிலர் உதவியாக இருக்கிறார்கள். சங்கங்களை சேர்ந்த சிலரும் துணையாக உள்ளனர். இதனால் ஒரு தரப்பை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. மாவட்ட கலெக்டர் அழகு மீனா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகிறார். அந்த வகையில் குளங்களில் இருந்து முறைகேடாக மண் எடுக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும் படை அமைத்து உத்தரவிட வேண்டும் என்றனர்.

Related posts

புரட்டாசி பவுர்ணமி வழிபாடு: சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்

பழைய பொருட்கள் குடோனில் பயங்கர தீ: கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் திணறல்

பலத்த போலீஸ் பாதுகாப்பு: ஜம்மு – காஷ்மீரில் நாளை 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு