த.வெள்ளையன் உடலுக்கு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அமைச்சர் சேகர்பாபு அஞ்சலி: இன்று உடல் அடக்கம்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் (76), வயது முதிர்வு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு அவரது உடல் பெரம்பூரில் உள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர், பெரம்பூர் பாரதி சாலையில் உள்ள வணிகர் சங்க அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாபா. பாண்டியராஜன், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் மலரஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், நேற்று காலை அமைச்சர் சேகர்பாபு, பேரவை தலைவர் அப்பாவு, பெரம்பூர் எம்எல்ஏக்கள் ஆர்.டி சேகர், தாயகம் கவி, எம்பி கிரிராஜன், திமுக வர்த்தக அணி மாநில செயலாளர் காசிமுத்துமாணிக்கம், எர்ணாவூர் நாராயணன், பழ நெடுமாறன் உள்ளிட்டோர் நேற்று மலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெரம்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. நேற்று மாலை அவரது உடல் பெரம்பூரில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து திருச்செந்தூரில் உள்ள பிச்சிவிளை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலை 4 மணியளவில் உடல் அடக்கம் செய்யப்படும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதனிடையே மறைந்த வெள்ளையன் உடலுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா நேற்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வெள்ளையனின் மறைவு வணிகர்களின் குடும்பத்திற்கு பேரதிர்ச்சி தந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடையடைப்பு செய்யப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளோம். அவருக்கு அஞ்சலி கூட்டங்களை நடத்திட ஏற்பாடு செய்துள்ளோம். தமிழக அரசும் அரசு மரியாதை செய்ய வேண்டும். த.வெள்ளையன் வசித்த பெரம்பூர் பகுதியில் உள்ள தெருவிற்கு அவரது பெயரை வைக்க வேண்டும்’’ என்றார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்