சரியாக செயல்படாத, 75 வயதை தாண்டிய 100 எம்பிக்களுக்கு கட்டம் கட்டுகிறது பாஜ: 2024 மக்களவை தேர்தலில் புதுமுகங்களை களமிறக்க முடிவு

புதுடெல்லி: சரியாக செயல்படாத, 75 வயதை தாண்டிய 100 சிட்டிங் எம்பிக்களுக்கு பாஜ மேலிடம் கட்டம் கட்ட முடிவு செய்துள்ளதுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் இவர்களுக்கு பதிலாக புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கவும் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இப்பொழுதே தேசிய கட்சிகள் தேர்தலுக்கு தயாராகத் தொடங்கி உள்ளன. ஆளும் பாஜவை பொறுத்த வரையில், ஒன்றியத்தில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளது. அதற்காக வலுவான வேட்பாளர்களை களமிறக்கவும் முடிவு செய்துள்ளது. அந்த வகையில், தற்போது எம்பிக்களில் சரியாக செயல்படாத, 75 வயதை தாண்டிய 100 பேருக்கு பதிலாக புதிய வேட்பாளர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜ சார்பில் 21 எம்பிக்கள் களமிறக்கப்பட்டனர். அவர்களில் 9 பேர் தோல்வி அடைந்தனர். இதன் மூலம், 2019 மக்களவை தேர்தலில் இவர்கள் மோடி அலையில் வெற்றி பெற்றதாகவும், சொந்த மாநிலத்தில் செல்வாக்கு இல்லாதவர்கள் என்றும் பாஜ மேலிடம் முடிவு செய்துள்ளது. இதனால் இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது. தெலங்கானாவில் போட்டியிட்டவர்களுக்கு மட்டும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படலாம் என கூறப்படுகிறது.

இவ்வாறு சட்டப்பேரவை தேர்தலில் எம்பிக்களை களமிறக்கியது கூட, மக்களவை தேர்தலில் அவர்களுக்கு மீண்டும் சீட் தரக்கூடாது என்ற அடிப்படையில்தான் எடுக்கப்பட்ட முடிவு. இதுதவிர, அசோசியேஷன் ஆப் பிரில்லியண்ட் மைண்ட்ஸ் என்கிற அமைப்பு சமீபத்தில் நடத்திய சர்வே அடிப்படையில், மக்கள் அதிருப்தியில் உள்ள எம்பிக்கள் ‘அபாய பட்டியலில்’ சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களின் செயல்பாடுகளை கட்சி மேலிடம் மறுஆய்வு செய்து வருகிறது. இதுமட்டுமின்றி, பிரதமரின் அதிகாரப்பூர்வ நமோ ஆப்பில் மக்களின் எண்ணங்களை அறிய ‘ஜன் மன் சர்வே’யை மோடி கடந்த வாரம் தொடங்கி வைத்தார். இதில் மக்கள் தரும் பதில்கள் அடிப்படையிலும் அபாய பட்டியலில் உள்ளவர்கள் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது கூட, 99 சிட்டிங் எம்பிக்களுக்கு பாஜ சீட் தரவில்லை. புது முகங்களுக்கு வாய்ப்பு தந்தது. அதே போல இம்முறை 100 எம்பிக்கள் அபாய பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. பாஜ கட்சியில் 75 வயதை தாண்டியவர்களுக்கு எந்த பதவியும் தரக்கூடாது என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. இதன்படி மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் கூட சீட் மறுக்கப்பட்டது. அதே போல, வயது மூப்படைந்தவர்களுக்கும் 2024 தேர்தலில் ஓய்வு தரப்பட உள்ளது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு