எம்.பி. சீட் கேட்டு சிபாரிசு செய்யும் நிர்வாகிகளிடம் எரிந்து விழும் சேலம்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலத்துக்காரர் ஊரில் தேனிக்காரரின் மனம் குளிருமா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியில் தனக்கும் பங்குண்டு என தேனிக்காரர் ஏறி இறங்காத கோர்ட்டே இல்லை என்ற நிலையில், எந்த தகவலும் தனக்கு சாதகமா வரலையாம். இதனால் என்ன செய்வது என்றே தெரியாமல் கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல இருக்காராம். இப்படியாக தவித்துக்கிட்டிருந்த நேரத்துல இலைக்கட்சி தலைவரின் சேலத்துக்காரர் ஊருக்கு சென்று அரசியல் செய்ய நினைச்சாலும் அங்குள்ள மா.செக்களின் செயல் திருப்தியா இல்லைன்னு வெளிப்படையாகவே சொல்லி வருத்தப்பட்டாராம். இந்த அவப்பெயரை போக்கும் வகையில் ஒரு மா.செயலாளர் தனது சொந்த செலவில் 500 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருக்காராம். தங்களது கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்லாமல் ஏழை பெண்களையும் ஒருங்கிணைத்து இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தப்போறாராம். பட்டுப்புடவை, வேட்டி, கர்ப்பிணி பெண்களுக்கான பலவகை சாப்பாடு மட்டுமில்லாமல் அவர்களின் குடும்பத்தினருக்கு பிரியாணி வழங்கவும் திட்டமிட்டுள்ளாராம். சேலம் என்றாலே ஏமாற்றம்தான் என்ற நிலையில் இருக்கும் தேனிக்காரரை இந்த நிகழ்ச்சியிலாவது மனம் குளிர வைச்சிடணும் என்பதில் குறியா இருக்காராம் அந்த மா.செ….’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கிட்டாராமே இலைகட்சி செக்ரட்ரி..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டம் அணையான ஊர்ல ஆர்ப்பாட்டம் நடந்ததை நினைச்சி, இலைகட்சிக்காரங்களே அதிருப்தியில இருக்காங்களாம். காரணம் மணல் குவாரிகளை கண்டிச்சு இந்த ஆர்ப்பாட்டம் நடந்துச்சு. ஏற்கனவே, இயங்கி வந்த மணல் குவாரியை மூடி மாதங்கள் ஆகுது. இப்ப மணல் குவாரிய மூடியதுகூட தெரியாம, அதை எதிர்த்து இலை டிஸ்ட்ரிக் செக்ரட்ரி ஆர்ப்பாட்டம் நடத்துறது நினைச்சு, அந்த ஊர்லயே பெரிய அதிருப்திய ஏற்படுத்தியிருக்குதாம். குவாரி இயங்கியபோது ஆர்ப்பாட்டம் ஏதும் நடத்தாம, இல்லாத குவாரியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துறது கட்சிக்கே கெட்டப்பெயரை உண்டாக்குற மாதிரி இருக்குதே, நம்ம ஆளே கல்குவாரி நடத்தி வர்ற நிலையில் இப்படி இல்லாத மணல் குவாரிக்கு ஆர்பாட்டமான்னு இலைகட்சிக்காரங்களே திட்டி தீர்க்குறாங்களாம். அதற்கேற்ப அப்பகுதிகளை சேர்ந்த பப்ளிக், மாவட்ட உயர் அதிகாரிகிட்ட, இலை கட்சிக்காரரோட கல் குவாரியை மூட வேண்டும்னு மனு அளிச்சிருக்காங்க. நம்ம ஆளு சொந்த காசுல சூனியம் வெச்சிகிட்டாரே, தலைமைக்கு இதையெல்லாம் சொன்னாத்தான் சரிபட்டு வரும்னு ரத்தங்களே பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஆதரவாளர்களுக்கு எம்பி சீட்டு கேட்டு சிபாரிசு செய்யும் நிர்வாகிகள் மீது உச்சகட்ட கோபத்தில் இருக்காராமே சேலம்காரர்’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சிமென்டுக்கு பெயர் போன மாவட்டத்தில் இலை கட்சி மாவட்ட செயலாளராக முதல் எழுத்தில் ஆரம்பிக்க கூடிய தாமரை பெயர் கொண்டவர் இருந்து வருகிறார். சேர்மனாக கடைசி எழுத்தில் முடியக்கூடிய கரன் பெயர் கொண்டவர் உள்ளார். இந்த 2 பேருமே தனித்தனி டீமாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்குள் இருந்து வந்த பனிப்போர் எம்பி சீட்டுக்காக தற்போது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளதாம். இந்த இரண்டு பேரும், தங்களுக்கு வேண்டிய நபர்களை எம்பி தேர்தலில் முன்னிறுத்த வேண்டும் என தலைமைக்கு இப்போதில் இருந்தே அழுத்தம் கொடுக்க தொடங்கி விட்டனர். சேலத்துக்காரரிடம் நான் தான் நெருக்கமாக இருக்கிறேன் என்பதை காண்பித்து கொள்ள இந்த இரண்டு பேருமே ‘பில்டப்’ காண்பித்து வருகிறார்கள். ஆனால் இந்த 2 பேர் மீது, சேலம்காரர் உச்சகட்ட கோபத்தில் இருந்து வருகிறார். இந்த 2 பேரின் சிபாரிசை தவிர்த்து, சேலம்காரருக்கு நம்பிக்கையாக இருக்க கூடிய ஒருவருக்கு தான் எம்பி சீட் வழங்க 100 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக சொந்த கட்சி நிர்வாகிகளுக்குள் பேசிக்கிறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரை கட்சியின் லீலைகள் குக்கரிடம் எடுபடலை போல..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘வடமாநில நதி பெயரில் முடியும் மாவட்ட மக்களவை தொகுதியில் போட்டியிட குக்கர் கட்சி தலைவருக்கு, தாமரை கட்சி அழுத்தம் கொடுத்ததாம்… இலைக்கட்சியில் டம்மி வேட்பாளரை நிறுத்தும்பட்சத்தில், இங்கு நாம் தீவிர கவனிப்பு செய்தால் வெற்றி பெற்றுவிடலாம் என குளிர்விக்கும் வகையில் பேசி உள்ளனர். உஷாரான குக்கர் கட்சித்தலைவர் தன்னையும், கட்சியையும் பலிகடாவாக்க ஏதோ திட்டம் தீட்டுகின்றனர் என எண்ணியபடியே, கட்சி தொண்டர்களிடம் ஆலோசனை நடத்தி உள்ளார். அவர்களும் சாதகமாக கூறாததால், பலவிதமான காரணங்களை கூறி, இந்த தொகுதியில் போட்டியிட முடியாது என கழன்று கொண்டாராம்… தர்மயுத்தமும் தனது வாரிசை இங்கு நிறுத்த ரொம்ப யோசிக்கிறாராம். இதனால் வேறுவழியின்றி, தாமரை கட்சியே இங்கு போட்டியிடும் சூழல் உருவாகி இருக்கிறதாம். இலைக்கட்சியிலிருந்து தாவி வந்த மாஜி எம்எல்ஏவிடம் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். தொகுதியை கூட்டணிக்கு தள்ளிவிட்டு விடலாம் என மகிழ்ச்சியில் இருந்த தாமரை கட்சி நிர்வாகிகள், குக்கர் – தர்மயுத்தத்தின் எஸ்கேப் ஆட்டத்தால் கதிகலங்கி உள்ளனர்…’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு