வீட்டிலேயே குடிக்க சொல்லுங்க… ம.பி. பெண்களுக்கு அமைச்சர் அட்வைஸ்

போபால்: மத்தியப்பிரதேசத்தில் பெண்கள் தங்களது கணவரை வீட்டிலேயே மது அருந்துமாறு கூற வேண்டும் என்று மாநில சமூக நீதித்துறை அமைச்சர் அறிவுறுத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப்பிரதேசத்தின் போபாலில் நேற்று முன்தினம் மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில சமூக நீதித்துறை அமைச்சர் நாராயண் குஷ்வாஹா கலந்து கொண்டு பேசுகையில், ‘‘மதுவை ஒழிப்பதில் வீட்டில் இருக்கும் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் மிகப்பெரிய பங்கு வகிக்கிறார்கள். நீங்கள் உங்கள் கணவரிடம் மது குடிப்பதாக இருந்தால் கடைக்கு சென்று குடிக்க வேண்டாம், வீட்டிலேயே என் முன்னால் குடியுங்கள் என்று கூறுங்கள். மனைவியின் முன் குடிப்பதாக இருந்தால் அவர்களது அளவு படிப்படியாக குறையும். எதிர்காலத்தில் உங்களது குழந்தைகளும் குடிப்பழக்கத்தை கற்றுக்கொள்வார்கள் என்று கூறுங்கள்.

வீட்டில் குழந்தைகள் முன் குடிப்பது அவர்களுக்கு அவமானமாக இருக்கும். இதனால் குடிப்பழக்கத்தை விடுவதற்கும் வாய்ப்பு உண்டு” என்றார்.அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் அமைச்சரின் இந்த பேச்சு குடும்ப வன்முறைக்கு வழிவகுக்கும் என்று எதிர்கட்சியான காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. குடும்ப வன்முறைக்கு மிக முக்கிய காரணம் மது பழக்கம் தான் என்றும் எனவே அமைச்சர் தனது கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்