ஒரே எம்பியாக இருந்த குஜ்ரால் பிரதமராகும் போது இபிஎஸ் பிரதமராக முடியாதா? அண்ணாமலைக்கு ராஜேந்திரபாலாஜி பதிலடி

சிவகாசி: ‘ஒரே எம்பியாக இருந்த ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்தபோது, எடப்பாடி பழனிசாமி பிரதமராக முடியாதா’ என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார். விருதுநகரில் 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ‘‘எடப்பாடி சொல்கின்றவர்தான் அடுத்த பிரதமர் அல்லது சூழ்நிலை வந்தால் எடப்பாடியாரே பிரதமராக வரக்கூடிய அளவுக்கு மக்கள் தீர்ப்பளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘‘இதற்கு சிரிப்புதான் எனது பதில்’’ என கேலியாக பதிலளித்தார். இதற்கு ராஜேந்திரபாலாஜி பதிலடி தந்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக 52ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி பேசும்போது, ‘‘எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆவார் என்று நான் சொன்னபோது ஒரு சிலர் கேலியாக சிரிக்கின்றனர்.

அவர்களுக்கு நான் ஒன்றை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். ஒரே எம்பியாக மட்டுமே இருந்த ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்தார். ஒரு சில எம்பிக்கள் மட்டுமே வைத்திருந்த தேவகவுடா மற்றும் சந்திரசேகர் பிரதமராக இருந்தனர். அப்படி இருக்கும்போது இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏன் பிரதமராக கூடாது? ஒன்று எடப்பாடி பழனிசாமி கைகாட்டும் நபர்தான் பிரதமர் அல்லது அவரே பிரதமர். எடப்பாடியார் பின்னால் 2 கோடி தொண்டர்கள் அணிவகுத்து உள்ளனர்’’ என கூறினார். இதன் மூலம் அதிமுக- பாஜ மீண்டும் மோதல் தொடங்கி உள்ளது.

* அதிமுக பற்றி அண்ணாமலை பேசினால் கவலைப்படாதீர்கள்; எஸ்.பி.வேலுமணி தெம்பு
கோவை, கோவை புறநகர் தெற்கு, வடக்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ பேசியதாவது: சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்தால் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, இணைந்து பணியாற்ற வேண்டும். பாஜவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளோம் என சிலர் தவறாக பிரசாரம் செய்கிறார்கள். திரித்து பேசுகிறார்கள். இதை, மக்கள் நம்ப மாட்டார்கள். நாம் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம். நம்மை பற்றி அண்ணாமலை எது பேசினாலும் கவலைப்படாமல் கட்சிப்பணியாற்ற வேண்டும். இவ்வாறு எஸ்.பி.வேலுமணி பேசினார்.

Related posts

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம்!

நெய் விநியோகித்த ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை சோதனை!!