எம்.பி.யாக ஆசைப்படும் எம்எல்ஏ, வலுத்துவரும் எதிர்ப்பை கண்டு அரண்டு போயிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மாஜி எம்எல்ஏ, நகர் மன்ற தலைவர்களுக்குள் மோதலால் கட்சி தாவ தேனிக்காரர் அணி நிர்வாகிகள் முடிவு பண்ணியிருக்கிறதா சேதி வருதே.. உண்மைதானா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைகட்சியில சேலம்காரரிடம் இருந்து தேனிக்காரர் பிரிந்து வந்த போது அவருடன் மாஜி அமைச்சர் வைத்தியானவர் மற்றும் டெல்டா மாவட்டத்தில் உள்ள அவரது ஆதரவாளர்களும் உடன் வந்தனர். வைத்தியானவர் ஆதரவாளர்களான மன்னர் மாவட்டத்தை சேர்ந்த மாஜி எம்எல்ஏ, மாஜி நகர் மன்ற தலைவர் ஆகியோரும் போட்டி போட்டுக்கொண்டு அவரது ஆதரவாளர்களுடன் தேனிக்காரர் அணிக்கு தாவினர். சேலம்காரர் அணியில் இருக்கும் போதே இந்த இரண்டு பேருக்கும் இடையே இருந்த மனக்கசப்பு தேனிக்காரர் அணிக்கு வந்தும் நீடித்தது. இதே போல் இருவருக்கும் நெருக்கமான நிர்வாகிகளுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படுகிறதாம்… தொண்டர்கள் இல்லாத கட்சிக்கு ஏன் இப்படி அடித்து கொள்கின்றனர் என அவர்களது அணிக்குள்ளே கிண்டல் அடித்துக் கொள்கின்றனர்.

இலை கட்சி சேலம்காரர் கட்டுப்பாட்டுக்குள் சென்றதால் தேனிக்காரருக்கு அரசியல் எதிர்காலம் இல்லாமல் போச்சு. இந்த அணியில் இருந்தால் நமக்கு என்ன இனி கிடைக்கபோகுது. இலை கட்சி சேலம்காரர் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடனே அவரது அணிக்கு போயிருக்கலாம். சேலம்காரர் டீம் அழைத்த போது போயிருந்தா நமக்கு பதவி இல்லாட்டியும் கொஞ்சம் மரியாதையாவது கொடுத்து இருப்பாங்க. இப்போது எல்லாம் போச்சு. இனி இவர்களை நம்பி தேனிக்காரர் அணியில் இருந்தால் இருப்பதை இழந்து வீதிக்கு வரக்கூடிய நிலை ஏற்படும் என்பதால் நாடாளுமன்ற தேர்தலுக்குள் மாற்று கட்சிக்கு தாவி விடலாம் என நிர்வாகிகளுக்குள் முடிவு எடுத்துள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சேலம்காரரின் ஆதரவாளர்களின் அதிர்ச்சிக்கு என்ன காரணம்…’’ என கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கடலோர மாவட்டத்தின் தீவு நகருக்கு, ஒன்றிய முக்கிய மந்திரி கடந்த ஆண்டு ஜூலை மாதம் வந்து சென்றார். தொடர்ந்து இம்மாதம் 21ல் பிரதமரும் வந்து சென்றார். இதனை தொடர்ந்து கடலோர நகரத்திற்கு பிப். 3ல் 3 நாள் பயணமாக பரிசுப்பெட்டிக்காரர், பிப். 9ம் தேதிக்கு தேனிக்காரர் வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தாமரையும், பரிசுப்பெட்டியும், தேனிக்காரரும் வேலையை தொடங்கி, தங்கள் கூட்டணியை உறுதிப்படுத்தி விட்டதாக இக்கட்சி நிர்வாகிகள் அனைவருமே கூறி வருகின்றனர். கடைசி நேரத்தில் தாமரை கட்சியுடன் கைகோர்த்திடும் எதிர்பார்ப்பில் இருக்கிற சேலத்துக்காரர் தரப்பு ஆதரவாளர்களுக்கு இது அதிருப்தி கலந்த அதிர்ச்சியை தந்துள்ளது. இப்போதைக்கு தேனிக்காரர் தரப்பில் உள்ள முக்கிய ஆதரவாளர்களை, பதவி, பண ஆசை காட்டி தங்கள் பக்கம் இழுப்பதில் மட்டுமே சேலத்து தரப்பினர் ஒரே குறியாக உள்ளனராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நாடாளும் மன்றத்தோட சீட்டு ‘சி’ பேஸ் பண்ணி தான் நடக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் நாடாளும் மன்றத்தோட வேட்பாளர் யார்னு இலைகட்சியில ஆள் தேடி வர்றாங்களாம். இதுல குடி ஏற்றம் நகரத்தோட தொழில் அதிபர் ஒருத்தர் கிட்ட, மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல இருக்குற இலைகட்சி முக்கிய பிரமுகர் 10 சி வரைக்கும் தலைமைக்கு ெகாடுக்க வேண்டியிருக்குதுன்னு பேரம் பேசுனதாக சொல்லிக்குறாங்க. 3 சி பேரம் பேசி, அப்புறம் 7 சி வரைக்கும் பேரம் நடந்ததாம். அதற்குள்ளாக பட்டு என்று முடியும் ஒன்றியத்தோட செயல் ஆளராக இருக்குற ஒருத்தர், 10 சி வரைக்கும் நான் கொடுக்குறேன்னு, ரெடி செஞ்சி கொடுத்துட்டாராம். ஆனா, அவர் டிகிரி படிக்கலையாம்.

தலைமை, படிச்சவங்கள நிற்க வைக்கலாம்னு சொல்லிடுச்சாம். இதனால குடி ஏற்றத்துலயே ஒன்றியத்தோட கவுன்சிலராகவும், தொழில் அதிபராகவும் இருக்குறவரை நிற்க வைக்கலாம்னு முடிவு செஞ்சிருக்காங்களாம். இவர் டபுள் டிகிரி முடிச்சிருக்காராம். அதோட 10 சி கொடுக்கவும் தயாராக இருக்குறாராம். சி யார் ெகாடுக்குறாங்களோ, அவர்களே வேட்பாளர்னு இலை கட்சியில சொல்லாம சொல்றாங்களாம். மொத்தத்துல நாடாளும் மன்றத்தோட சீட்டு ‘சி’ பேஸ் பண்ணி தான் நடக்குது. இனிமேல் சாமானிய கட்சிக்காரங்க எம்பி, எம்எல்ஏ ஆகுறது குதிர கொம்புதான்னு இலை கட்சியில பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘எம்எல்ஏக்கு எம்.பி. ஆசை வந்துட்டு போல..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.‘‘அல்வா ஊரின் எம்எல்ஏ இலை கட்சியில் இருந்து தேசிய கட்சிக்கு தாவியவர். கடந்த சட்டசபை தேர்தலில் இலை கட்சி கூட்டணியுடன் அதே தொகுதியில் நின்று எம்எல்ஏவும் ஆகி விட்டார். தற்போது தேசிய கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவரும் அவர் தான். எனினும் தேசிய கட்சியில் நின்று மாநில அரசியலில் இருந்தால் அதிகபட்சம் எம்எல்ஏ தான் ஆக முடியும். இதனால் மக்களவை தேர்தலில் குதித்து எப்படியாவது விஐபி ஆகி விட வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு, ஆசை. இதனால் வருகிற மக்களவை தேர்தலில் களத்தில் குதிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக தேர்தல் ேததி, வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் முன்பே தனது ஓட்டலில் அல்வா தொகுதியின் தேர்தல் அலுவலகத்தை நல்ல நாள் பார்த்து திறந்துள்ளார். ஆனால் அவரது முடிவுக்கு தற்போதே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அல்வா சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் பெரும்பான்மை சமூகத்தின் பிரதிநிதிகள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஏற்கெனவே எம்எல்ஏவாக இருக்கும் இவருக்கு மக்களவை தேர்தலிலும் சீட்டா என ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். ஏற்கெனவே இலை கட்சியின் கூட்டணி டமால் ஆகி விட்டது. தனித்து நின்றால் நம்ம கதி அதோ கதி தான் என்ற யோசனையில் இருந்த தேசிய கட்சியின் எம்எல்ஏ, முன் வைத்த காலை பின் வைக்க முடியாதே என அரண்டு போயிருக்கிறாராம்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘சிறுபான்மையினர் ஓட்டுகளுக்காக வேஷம் போடும் சேலத்துக்காரர் மீது கோபத்தில் இருக்கும் கட்சிகள் கடுமையாக அவரை விமர்சித்து வருகிறார்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சிறுபான்மையினர் ஓட்டுகளுக்காக இலை கட்சியின் சேலத்து விஐபி வேஷம் போட்டு வருவதாக புரம் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் குக்கர் கட்சி தலைவர் குற்றச்சாட்டை தெரிவித்தாராம். அதை தொடர்ந்து பாதயாத்திரைக்கு வந்த தாமரை கட்சியின் மாநில தலைவரும் சேலத்துக்காரரை கடுமையாக விமர்சித்துவிட்டு சென்றிருக்கிறாராம். அண்ணன் ஒருவர் சில நாட்களாக நெற்றியில் வைத்திருந்த விபூதியை அழித்துவிட்டு போலி மதசார்பின்மையை பின்பற்றி வருகிறார். அவர் வேறு யாருமில்லை, நமது பங்காளி கட்சிதான். அவர்களை அப்புறமாக பார்த்து கொள்வோம் என்று பேசினாராம். கூட்டத்திற்கு வந்தவர்களோ யார் என்று குழம்பிட, வேறு யார் அண்ணே நம்மளோடு சண்டை போட்டு கூட்டணியை முறித்த கட்சிதான். பங்காளிகளுக்குள் அடிக்கடி சண்டை போடுவதை சூசகமாக சுட்டிக்காட்டியிருப்பதாக தெரிவித்தார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

மகாளய அமாவாசை : மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!!

போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை