ம.பி. பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 11 பேர் பலி, 200 பேர் படுகாயம்

போபால்: மத்தியபிரதேசத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 11 பேர் உடல் கருகி பலியாகினர். 200 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்தியபிரதேச தலைநகர் போபாலில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள ஹர்தா பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வழக்கம்போல் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒரு அறையில் வைக்கப்பட்ட பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அங்கிருந்த பட்டாசுகள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் ஆலையின் மேல்புறம் வரை தீ கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மீட்பு குழுவினர் பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த கோர விபத்தில் சிக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகி விட்டனர். 200 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்வர் மோகன் யாதவ், கூடுதல் தலைமை செயலாளர் அஜித் கேசரி, அமைச்சர் உதய் பிரதாப் சிங் மற்றும் அதிகாரிகளை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்து, மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை மாநில அரசே ஏற்கும் என முதல்வர் மோகன் யாதவ் கூறியுள்ளார்.

 

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்