செடிகொடிகள் வளர்ந்து விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகரிப்பு பராமரிப்பின்றி குப்பை கிடங்காக மாறிய புழல் ஏரி: மின் விளக்குகள் அமைத்து, சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

புழல்: பராமரிப்பின்றி செடி கொடிகள் வளர்ந்து குப்பை கிடங்காக மாறிய புழல் ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றானது புழல் ஏரி. இதன் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. இங்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி 2,141 மில்லியன் கன அடி தண்ணீர் தற்போது இருப்பு உள்ளது. சென்னை மக்கள் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 184 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

புழல் ஏரிக்கு நீர்வரத்து 36 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. புழல் ஏரி காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து புழல் கண்ணப்ப சாமி நகர், சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வரை சுமார் 3 கிமீ தூரத்தில் கரை உள்ளது. இந்த கரை மீது செங்குன்றம், புழல், வடகரை, கிரான்ட்லைன், புள்ளிலைன், தீர்த்தங்கரையம்பட்டு, அழிஞ்சிவாக்கம், விளாங்காடுப்பாக்கம், சென்றம்பாக்கம், வடபெரும்பாக்கம், பாடியநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி சென்று வருகின்றனர். மேலும், மாலை நேரங்களில் இளசுகல் ஏரிக் கரைமேல் அமர்ந்து ஏரியின் தண்ணீரை ரசித்தபடி நீண்ட நேரம் பேசி மகிழ்கின்றனர்.

இப்படிப்பட்ட இந்த கரையில் இரண்டு பக்கங்களிலும் செடிகொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது. இதனால், புதர்களில் பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் அதிகளவில் நடமாட்டம் உள்ளதால் நடைபயிற்சிக்கு சென்று வருபவர்களும், ஏரியை ரசிக்க வரும் பொதுமக்களும் அச்சத்துடன் செல்கிறார்கள். இந்த, கரைமேல் உள்ள சாலை பழுதடைந்து ஜல்லி கற்கள் கொட்டியதுபோல் உள்ளது. இதனால், நடைபயிற்சிக்கு செல்லும்போது கூட சிரமப்பட வேண்டியுள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும், கரை மேலே பல இடங்களில் மின்சார கம்பங்கள் வைக்கப்பட்டு மின்விளக்குகள் எரியாமல் உள்ளன.

ஒருசில இடங்களில் மின்சாரம் கம்பங்களே இல்லை. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட செங்குன்றம் நீர்வள துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து கரையின் 2 பக்கங்களிலும் வளர்ந்துள்ள செடிகொடிகளை அகற்றி சாலையை சீரமைத்து புதிதாக மின் கம்பங்கள், மின் விளக்குகள் அமைத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து, நடைபயிற்சி செல்பவர்கள் கூறுகையில், புழல் ஏரிக் கரைமேல் தினசரி நாங்கள் நடைபயிற்சி சென்று வருகிறோம். கரைமேல் உள்ள சாலை படுமோசமாக இருப்பதால் நடப்பதற்கு சிரமமாக உள்ளது. சாலையின் இரண்டு பக்கங்களிலும் புதர்போல் செடிகள் வளர்ந்துள்ளதால், அதிலிருந்து வெளியேறும் பாம்புகள், விஷ பூச்சிகளால் தினசரி சிரமப்பட்டு வருகிறோம்.

இதுகுறித்து, செங்குன்றம் நீர்வளத்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் கண்டும் காணாமல் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்ற தேர்தல் அறிவித்த நேரத்தில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் நேரில் வந்து வாக்கு கேட்டபோது, ஏரிக்கரையை அழகுபடுத்தி இதனை சுற்றுலாத் தலமாக உருவாக்குவோம் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் புழல் ஏரியை கண்டும் காணாமல் உள்ளனர் என வேதனை தெரிவித்தனர்.

பயனற்ற கட்டுப்பாட்டு அறை
மழைக்காலங்களில், குறிப்பாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் புழல் ஏரி 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கும். இதனால் ஏரியின் மதகு அருகே யாரும் செல்லாமல் இருக்க, கரைமேல் காவல் கட்டுப்பாட்டு பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டது. தற்போது அந்த பாதுகாப்பு அறை பராமரிப்பின்றி பழுது அடைந்துள்ளது. இதனால், இந்த அறையில் காவலர்கள் யாரும் வருவது கிடையாது. எனவே, இதை புதுப்பித்து ரோந்து பணியில் காவலர்களை நியமித்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார்

பள்ளி மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும்.! கூல் லிப் குட்கா வகைகளை தடை செய்ய விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை