குடும்ப கஷ்டத்தை போக்க துக்க வீட்டில் மாலைக்கு பதில் பணம்: தஞ்சாவூர் அருகே நெகிழ்ச்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே துக்க வீட்டில் மாலைக்கு பதில் சில்வர் பத்திரத்தில் பணம் போட்டு சென்ற சம்பவம் தஞ்சாவூர் அருகே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் தெற்கு தெருவை சேர்ந்த கலியமூரத்தி மகன் திருப்பதி (35). தச்சு தொழிலாளியான இவர், கடந்தாண்டு டூவீலரில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார். தஞ்சாவூரில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. படுத்த படுக்கையாகவே இருந்த அவர் 18ம் தேதி நள்ளிரவு இறந்தார். கடந்த ஓராண்டு காலமாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்ததால் திருப்பதி குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் திருப்பதியின் இறுதிச்சடங்கு அவரது வீட்டில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட திருப்பதியின் குடும்பத்திற்கு உதவு வகையில், அஞ்சலி செலுத்த வருபவர்கள் மாலை வாங்கி வர வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக பணமாக தாருங்கள் என சமூக வலைதளங்களில் அவரது நண்பர்கள் பதிவிட்டனர். இந்த பதிவு வைரலானது. இதனிடையே மொத்தமாக 20 மாலைகளை வாங்கி வந்து துக்க வீட்டில் வைத்திருந்தனர். அதன் அருகே ஒரு சில்வர் பாத்திரமும் வைக்கப்பட்டது.

அஞ்சலி செலுத்த வந்த உறவினர்கள், நண்பர்கள் ஒரு மாலையை எடுத்துக்கொண்டு, அருகில் வைக்கப்பட்டிருந்த தவலையில் ரூ.100 முதல் ரூ.1000 வரை தங்களால் இயன்றதை போட்டனர். அஞ்சலி செலுத்திய மாலையை மீண்டும் எடுத்து வைத்துக்கொண்டனர். இது குறித்து திருப்பதியின் உறவினர் பிரபு கூறுகையில், ‘இறந்த திருப்பதிக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவரது இறுதி சடங்கில் மாலைக்கு பதில் ரூ.35,350 ரொக்கம் கிடைத்தது. இந்த தொகை இப்போதைய சூழ்நிலையில் அந்த குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்,’என்றார்.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்