தாய் தமிழின் புகழ் மகுடம்

இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள், இப்போது நாட்டின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில், இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் உள்ள வழக்கமான தீர்ப்புகள் என்பது அசாம், இந்தி, கன்னடம், மராத்தி, ஒடியா மற்றும் தெலுங்கு மொழி பெயர்ப்புகளின் பிரத்யேக முகப்பாக மாறியது. பின்னர், அனைத்து மாநில மொழிகளிலும் மொழி பெயர்க்கும் நடவடிக்கை அமலுக்கு வந்தது. வடமாநிலங்களை பொறுத்தவரை, தங்களது உயர்நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியான இந்தியை பயன்படுத்துகிறது. ஆனாலும், இந்தியாவில் சட்டத்தின் மொழி ஆங்கிலம் என்பது நடைமுறையில் உள்ளது. இதனால் உச்சநீதிமன்ற விசாரணைகள் மற்றும் தீர்ப்புகள் ஆங்கில மொழியிலேயே விவாதிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. நாடு சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றம் வழங்கிய 37 ஆயிரம் தீர்ப்புகள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் இந்திக்கு அடுத்தபடியாக செம்மொழியான நம்மொழியில் அதிக மொழி பெயர்ப்புகள் நடந்து வருவது, தாய் தமிழின் புகழுக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டியுள்ளது. அரசமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட இந்தி, வங்காளம், தமிழ் உள்பட 22 மொழிகளில் தீர்ப்புகளை மொழி பெயர்க்கும் பணியில் உச்சநீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. மின்னணு உச்சநீதிமன்ற அறிக்கைகளில் (இஎஸ்சிஆர்) உள்ள தீர்ப்புகளில் இருந்து நடுநிலையான மேற்கோள்களை வழக்கறிஞர்கள் வாதிடும் நீதிமன்றங்களில் வழங்கலாம். இதற்காகவே தற்போது ஏ.ஐ., தொழில் நுட்பத்தின் உதவியுடன் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள், பிராந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் சென்றடைவது உறுதிப்படுத்தப்படும். இந்த வகையில் இந்திக்கு அடுத்தபடியாக, தமிழில் அதிக மொழி பெயர்ப்புகள் நடைபெற்று வருகிறது என்று சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது 52.83கோடி பேர், இந்தியை (43.63சதவீதம்) தாய்மொழியாக பேசுகின்றனர்.

வங்க மொழியை 9.72 கோடி மக்கள் பேசுகின்றனர். மராத்தி மொழியை 8.30கோடி மக்கள் பேசுகின்றனர். ெதலுங்கு மொழியை 8.11 கோடி மக்கள் பேசுகின்றனர். தமிழ்மொழியை 6.90கோடி மக்கள் பேசுகின்றனர் என்று புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டது. மேற்கண்ட புள்ளிவிபரங்களின் படி மக்கள் பேசும் மொழியில் இந்தி முதலிடத்திலும், தமிழ் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. ஆனால், தற்போது நீதியரசரின் கூற்றுப்படி, மொழிபெயர்ப்பு ஆளுமையில் தமிழ் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இந்திய தேசம் மட்டுமன்றி கடல் கடந்தும் தாய்த்தமிழ் தழைத்தோங்கி நிற்பதே இதற்கான முக்கிய காரணம். புலமையும், செழுமையும் நிறைந்த தனித்துவ தமிழ் எளிமையாக எவரையும் உணர வைக்கும் ஒப்பற்ற வல்லமையும் கொண்டது. இதனால் மொழி பெயர்ப்பில் முந்தி நிற்பது வியப்புக்கு உரியதல்ல. இது ‘கல்தோன்றி மண்தோன்றா காலத்தே தோன்றிய மூத்த மொழி,’. இந்த வகையில் செம்மொழியான நம் மொழியே என்றென்றும் உலகின் முதல் மொழி என்பது எப்போதும் நமக்கான பெருமை.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை