குழந்தை வளர்ப்பில் தாய், தந்தைக்கு முக்கிய பங்குள்ளது; மனைவி மகப்பேறு காலத்தில் கணவர் உடனிருப்பதற்கு தனி சட்டம் அவசியம்: ஐகோர்ட் கிளை கருத்து

குழந்தை வளர்ப்பில் தாய், தந்தைக்கு முக்கிய பங்குள்ளது; மனைவி மகப்பேறு காலத்தில் கணவர் உடனிருப்பதற்கு தனி சட்டம் அவசியம்: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: மனைவியின் பிரசவத்தின்போது கணவரும் விடுப்பில் உடன் இருக்கும் வகையில் தனி சட்டம் அவசியம் என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. தென்காசி மாவட்டம், கடையம் இன்ஸ்பெக்டர் சரவணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எனது மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு சிகிச்சை மேற்ெகாண்டோம். அவரது பிரசவ காலத்தில் உடன் இருந்து கவனிக்க வேண்டியிருந்ததால், மே 1 முதல் 90 நாட்கள் விடுப்பு அளிக்குமாறு விண்ணப்பித்தேன். விண்ணப்பத்தை ஏற்று விடுப்பு வழங்கப்பட்டது. ஆனால், சட்டம் – ஒழுங்கு பிரச்னை காரணமாக விடுப்பை ரத்து செய்தனர். இதை எதிர்த்த வழக்கில் பரிசீலிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

இதனால் எனக்கு 30 நாள் விடுப்பு வழங்கப்பட்டது. மே 31ல் என் மனைவிக்கு குழந்தை பிறந்ததால் என்னால் பணிக்கு செல்ல முடியவில்லை. இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் ெதரிவித்தேன். இதை ஏற்காமல், நான் விதிகளை மீறி விட்டதாக கூறி விளக்கமளிக்குமாறு அழைப்பாணை கொடுத்தனர். இதை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவு: ஒருவர் குழந்தை பெற்றுக் கொள்ளும்போது அவருக்கு துணையாக இருப்பவர், அறிவு ஞானத்தை அளிப்பவர், உணவு வழங்குபவர், பயத்தில் இருப்பவர்களை பாதுகாப்பவர் தந்தையாக கருதப்படுவார் என நீதி சாஸ்திரம் கூறுகிறது.

மனைவியின் மகப்பேறு காலத்தில் அவரது கணவருக்கான விடுப்பு 20 ஆண்டுகளாகவே பேசப்படுகிறது. குழந்தை பிறக்கும்போது தந்தையும் உடன் இருப்பது மிக அவசியம். பல்வேறு நாடுகளில் மகப்பேறு காலத்தில் தாய்-தந்தையருக்கும் விடுப்பு வழங்கப்படுகிறது. குழந்தையை வளர்ப்பதில் தாய்-தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது. இந்தியாவில் மனைவி மகப்பேறின் போது கணவருக்கு விடுப்பு அளிக்கும் சட்டம் இல்லை. ஆனால் சென்ட்ரல் சிவில் சர்வீசஸ் (விடுப்பு) விதியில் தந்தையருக்கான விடுப்பு குறித்து கூறப்பட்டுள்ளது. இதை இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் அமல்படுத்தவில்லை.

எனவே, மகப்பேறு காலத்தில் மனைவியுடன் அவரது கணவரும் உடன் இருப்பதற்கு தனி சட்டம் உருவாக்குவது அவசியமாகிறது. இந்த வழக்கில் மனுதாரர் பொறுப்புள்ள தந்தையாக செயல்பட்டுள்ளார். அவருக்கு விளக்கம் கேட்ட அழைப்பாணை ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் ஆஜராகி மன்னிப்பு கடிதத்துடன் விளக்கமளிக்க வேண்டும். அவரின் விளக்கத்தை அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவரை உடனடியாக பணியில் சேர அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்