மாஸ்கோ தீவிரவாத தாக்குதல் கைதான 4 பேர் காயத்துடன் ரஷ்ய நீதிமன்றத்தில் ஆஜர்: 2 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசைக் கச்சேரி அரங்கில் நுழைந்த தீவிரவாதிகள் கடந்த 22ம் தேதி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் 136 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். மாஸ்கோவில் வரலாறு காணாத இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கிடையே, தாக்குதல் நடத்திய 4 முக்கிய தீவிரவாதிகள் உக்ரைனுக்கு தப்பிச் செல்லும் எல்லையில் கைது செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார். இந்நிலையில், கைதான தலேர்ட்ஜோன் மிர்ஜோயேவ் (32), சைதக்ரமி ரசபலிஜோடா (30), சம்சிதின் பரிதுனி (25), முகமதுசோபிர் பைசோவ் (19) ஆகிய 4 பேரும் மாஸ்கோ பாஸ்மன்னி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்கள் தஜிகிஸ்தானை சேர்ந்தவர்கள் என ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 4 பேருக்கும் முகம் வீங்கி, உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. பைசோவ் சக்கர நாற்காலியில் அமர வைத்து ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை முழுவதும் அவர் கண்களை திறக்காமல் சுயநினைவின்றி இருந்தார். அவரது காலில் பல வெட்டுகள் இருந்தன. இவர்கள் கைது செய்யப்பட்ட போது, கைதான ஒருநபரின் காதை ரஷ்ய ராணுவ வீரர்கள் அறுக்கும் வீடியோக்கள் வெளியாகின. ஆனால் இது குறித்து ஆதாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில், குற்றவாளி ரசபலிஜோடாவின் காதில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. விசாரணைக்குப் பின் 4 பேரையும் வரும் 22ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் மிர்ஜோயேவ், ரசபலிஜோடா ஆகியோர் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

Related posts

ராகுல்காந்தி குடியுரிமை விவகாரம்; ஒன்றிய அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் சரமாரி கேள்வி: அக். 24ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு இல்லாததே காரணம்: மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை