டெண்டர் கூட்டத்தில் 250க்கும் அதிகமான சந்தேகம் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்ய புது டெண்டர்: மின்வாரியம் முடிவு

சென்னை: ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்ய புதிய டெண்டரை கோர மின்வாரியம் முடிவு செய்துள்ளது. வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிடுவதில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வீடுகளுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தும் பணியை தமிழ்நாடு மின்வாரியம் கையில் எடுத்தது. ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கான டெண்டர் செயல்முறை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மாநிலம் முழுவதும் மூன்று தொகுப்புகளாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

முதல்கட்டமாக மேற்கு மாவட்டங்களில் சுமார் ஒரு கோடி ஸ்மார்ட் மீட்டர்களும், தென் மாவட்டங்களில் 80 லட்சம் மீட்டர்களும் பொருத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதில் பங்கேற்க, கடந்த 5ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. பின், டெண்டர் கடைசி தேதி, மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்மார்ட் மின் மீட்டருக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டு புதிய டெண்டரை கோர மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

ஸ்மார்ட் மின் மீட்டர் டெண்டருக்கான விளக்க கூட்டத்தில் பங்கேற்ற 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 265 சந்தேகங்களை எழுப்பினர். நிறுவனங்கள் எழுப்பிய சந்தேகத்துக்கு ஏற்ப டெண்டர் விதிகளில் திருத்தங்கள் செய்ய வேண்டும். எனவே, நிறுவனங்கள் கேட்கும் விபரங்கள் இடம்பெறுவதுடன், மூன்று தொகுப்புகளாக நடைபெற இருந்த பணியை ஒரே தொகுப்பாக சேர்த்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான புதிய டெண்டர் விரைவில் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி