மக்களின் மனநிலையை புரிந்துகொள்ளாமல் வேறு உலகத்தில் இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: நீட் தேர்வினால் தொடரும் உயிரிழப்புகள், தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை புரிந்துகொள்ளாமல் ஆளுநர் ரவி வேறு உலகத்தில் இருக்கிறார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். நீட்தேர்வில் அரசு ஒதுக்கீட்டில் சீட்டு கிடைக்காததால், குரோம்பேட்டை மாணவன் ஜெகதீஸ்வரன் கடந்த சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மகன் இறந்துபோன துக்கம் தாங்காமல் நேற்று அதிகாலை அவரது தந்தை செல்வசேகரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த செல்வசேகரின் உடலுக்கு, தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தினார். அப்போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவ கனவு பறிபோனதால் சகோதரர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். இதுவரை மாணவர்களை தான் பறிகொடுத்து இருந்தோம். தற்போது மாணவ செல்வங்களை சேர்ந்த குடும்பங்களையும் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். செல்வசேகரன் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொல்லும் அளவிற்கு எனக்கு தெம்பு கிடையாது. முதல்வர் வேண்டுகோள் வைத்துள்ளார். தயவு செய்து யாரும் இதுபோன்ற முடிவை எடுக்காதீர்கள். விரைவில் ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என்று முதல்வர் சொல்லி இருக்கிறார். ஆளுநர் பேசும்போதே பலி கொடுத்து இருக்கிறோம், ஆளுநர் மாளிகையில் மாணவர் பெற்றோரே எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் என்றால், ஆளுநர் இதை புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாடு ஆளுநர் ரவி வேறு உலகத்தில் இருக்கிறார். நீட்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்றால் சட்டப் போராட்டம் தான் ஒரே தீர்வு. அப்படி போராடினால் திமுக மாணவர்கள் பக்கம் நிற்கும். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் இருந்து நீட்டை ரத்து செய்வோம் என்றும் தெரிவித்து இருந்தார். கண்டிப்பாக விரைவில் ஒரு நல்ல மாற்றம் வரும். மாணவர்கள் தயவு செய்து தப்பான முடிவுகளை எடுக்காதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். ஆளுநர் புரிதலே இல்லாமல் பேசுகிறார். ஆளுநருக்கு ரோலே கிடையாது. இனி ஜனாதிபதி தான் முடிவு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை கொஞ்சம் கூட அறியாமல் வேறு ஒரு உலகத்தில் ஆளுநர் உள்ளார். ஒன்றிய பாஜவிடம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்வது, தயவுசெய்து நீட்தேர்தலில் இருந்து விலக்கு கொடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

தமிழ்நாட்டில் அடுத்த 3 நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

கூடலூர் அருகே மழை வெள்ள நீரில் ஆற்றை கடந்த யானைகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!