தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 7,033 மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை

*அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

தர்மபுரி : பாப்பிரெட்டிப்பட்டியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், 7,033 மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான பற்று அட்டைகளை, வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் ”தமிழ்ப் புதல்வன்” திட்டத்தை நேற்று கோவை அரசு கலைக்கல்லூரியில் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், தர்மபுரி மாவட்டத்தில் 68 கல்லூரிகளில் படிக்கும், 7,033 மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1000க்கான பற்று அட்டைகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் வழங்கினார். மாவட்ட கலெக்டர் சாந்தி, திமுக எம்பி ஆ.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் பேசியதாவது:

தமிழக முதல்வர், அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை கடந்த 2022 செப்டம்பர் 5ம்தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் பயிலும் சுமார் 3.28 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். இதனால் மாணவிகள் உயர்கல்வியில் சேரும் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் 16,842 மாணவிகள் பயனடைந்துள்ளனர். அதேபோல், தமிழ்ப் புதல்வன் என்னும் திட்டத்தை, முதல்வர் கோவை மாவட்டத்தில் துவக்கி வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், 68 கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும், 7,033 மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 நிதி உதவி வழங்கும் விதமாக, தற்போது 358 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிதி உதவியை மாணவர்கள் சேமிப்பாக வைத்து, புத்தகங்கள் வாங்குவது, கல்வி சார்ந்த விஷயங்களுக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

மாணவர்கள் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை உருவாக்கி கொள்ள வேண்டும். நீங்கள் மனது வைத்தால் எதையும் சாதிக்கலாம். எளிதில் வெற்றி அடையலாம். தர்மபுரி மாவட்டத்தில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 2ம் கட்டமாக ரூ.7,890 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவித்து, இதன் மூலம் தர்மபுரி மாவட்டத்திலுள்ள 2828 ஊரக குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள் தடங்கம் சுப்ரமணி, மனோகரன், வேடம்மாள், இன்பசேகரன், சிஇஓ ஜோதி சந்திரா, மாவட்ட சமூக அலுவலர் பவித்ரா, வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர், கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர் சிந்தியா செல்வி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராமஜெயம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மலர்விழி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சையது முகைதீன் இப்ராகிம், ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன், தாசில்தார் வள்ளி, பேரூராட்சி தலைவர் மாரி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரி முதல்வர் ரவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், வங்கி மேலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

உணவுக்காக யானைகளை கொலை செய்ய ஜிம்பாப்வே அரசு திட்டம்!!

தி.மலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம்; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள்: ரஷ்யா அதிபர் புதின் வலியுறுத்தல்