மாதம் ரூ.1 லட்சம்… அட்டகாச லாபம் தரும் ஆட்டுப்பண்ணை!

சேலம் நகர்ப்பகுதியில் பிறந்து கோவையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படித்தவர் லோகேஷ்வரன். கூடுதலாக சட்டப்படிப்பும் படித்திருக்கிறார். ஆனால் படித்த படிப்பு சார்ந்த பணி களில் அவருக்கு நாட்டமில்லை. இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும். விவசாயம் சார்ந்து இயங்க வேண்டும் என நினைத்து தங்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்துவிட்டார். வீட்டுக்குத் தேவையான கத்ரி, வெண்டை, தக்காளி என பல காய்கறிகளை பயிரிட்டு பயன்படுத்தி வருகிறார். அதோடு நின்றுவிடவில்லை. சேலத்தையொட்டிய கிராமப்பகுதியான பனைமரத்துப்பட்டியில் நான்கரைஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து நவீன முறையில் ஆட்டுப்பண்ணை நடத்தி வருகிறார். ஆடு வளர்ப்பில் மாதம் ஒரு லட்சம் லாபம் பார்த்து வருகிறார். தொழில் முனைவோர், கல்லூரி மாணவர்கள் என தினமும் யாராவது ஒருவர் இவரது பண்ணைக்கு விசிட் அடித்து ஆட்டுப்பண்ணை நடத்தும் நுட்பம் குறித்து அறிந்துகொள்கிறார்கள். ஒரு காலைப்பொழுதில் அவரது ஆட்டுப்பண்ணைக்கு சென்றோம். ஆடுகளுக்கு தீவனம் வழங்கும் பணியில் பிசியாக இருந்த லோகேஷ்வரன், நம்மை வரவேற்றுப்பேசத்தொடங்கினார். “அப்பா பிருதிவிராஜ் பிசினஸ்மேன்.

அம்மா சுமதி ஹவுஸ்ஒய்ப். தங்கை பேஷன் டிசைனர். இந்த வகையில் நானும் இன்ஜினியரிங் முடிச்சேன். அதன்பிறகு சட்டப்படிப்பிலும் தேர்ச்சி பெற்றேன். ஆனாலும் அது சார்ந்த துறையில் பணியாற்றலாம் என்ற திருப்தி எனக்குள் முழுமையாக இல்லை. சென்னை, சேலம் என்று பெருநகரங்களில் வலம் வந்தாலும் சிறுவயதிலேயே நான் பார்த்த வயல்வெளிகள், அங்கே மேய்ச்சலுக்கு நிற்கும் கால்நடைகள், குருவிகள்,பறவைகள் எல்லாம் எனக்குள் ஒரு தாக்கத்தை உருவாக்கிக் கொண்டே இருந்தன. இந்த பின்புலம்தான் என்னை கால்நடை வளர்ப்பில் ஈடுபடத் தூண்டியது. குடும்பத்தினரும் இதற்கு ஊக்கம் அளித்ததால் உருவானதுதான் இந்த ஆட்டுப்பண்ணை. கடந்த 3 ஆண்டுகளுக்கு இந்த பண்ணையை ஆரம்பித்தேன். அதற்கு முன்னதாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டுப்பண்ணை குறித்து கள ஆய்வில் இறங்கினேன். தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைகழகம் நடத்திய பயிற்சி முகாமில் பங்கேற்றேன். கிராமப்புறக்கால்நடை மருத்துவர்களுடன் கலந்துரையாடினேன். பிற நாடுகளில் ஆடுகள் வளர்க்கப் படும் முறைகள் குறித்தும் முழுமையாக தெரிந்துகொண்டேன். குக்கிராமங்களில் வசிக்கும் மூத்த விவசாயிகளுடன் பேசி, பல்வேறு ஆலோசனைகளைக் கேட்டறிந்தேன். அதன்பிறகுதான்பண்ணையை அமைத்தேன். ஆரம்பத்தில் ராஜஸ்தானின் சுரோகி, கேரளாவின் தலச்சேரி ஆடுகளை வாங்கி வந்து பண்ணையைத் துவக்கினேன். முதலில் 20 ஆடுகள் மட்டுமே இருந்தன.

75 சென்ட் நிலத்தில் பண்ணையை அமைத்திருக்கிறேன். 54 அடி நீளம், 36 அடி அகலத்தில் கொட்டகை அமைத்திருக்கிறேன். இதை பரண் முறையில் அமைத்திருக்கிறேன். பரணின் அடிப்பகுதியில் எப்ஆர்பி (பேப்ரிகேட்டட் ரப்பர் பிளாஸ்டிக்) என்ற மெட்டீரியல் மூலம் தரை அமைத்திருக்கிறேன். இதில் இடை இடையே ஓட்டைகள் இருக்கும். ஆட்டுப்பண்ணையில் பெரும்பாலும் கழிவுகள் அதிகம் சேரும். அந்த கழிவுகள் எப்ஆர்பியில் உள்ள ஓட்டைகள் மூலம் கீழே விழுந்துவிடும். இரும்பாக இருந்தால் ஆடுகளின் சிறுநீர் பட்டுப்பட்டு துரு பிடிக்கும். இதில் துருப்பிடிக்கும் பிரச்னை இருக்காது. கழிவுகள் உடனுக்குடன் வெளியேறி ஆரோக்கியமான சூழல் நிலவும். இதனால் ஆடுகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு குறையும். மூன்றே முக்கால் ஏக்கரில் பசுந்தீவனம் சாகுபடி செய்கிறேன். சூப்பர்நேப்பியர், குட்டநேப்பியர், வேலிமசால், அகத்தி, மக்காச்சோளம், கடலைச்செடி போன்றவற்றை பயிரிட்டு ஆடுகளுக்கு வழங்குகிறோம். சுரோகி ஆட்டையும், தலைச்சேரி ஆட்டையும் இணைத்து கலப்பின ஆடுகளாக உற்பத்தி செய்கிறோம். இவை நல்ல எடையுடன் வளர்கின்றன. ஆட்டுக்குட்டிகளின் இனப்பெருக்கத்திற்கு தரமான தாய் ஆடுகள் மிகவும் முக்கியம்.

இந்த ஆடுகளுடன் தென்ஆப்பிரிக்க ஆடுகளை இறக்குமதி ெசய்து சினையை உருவாக்குகிறோம். இப்படி உருவாக்கப்படும் ஆடுகளின் பால் தன்மை நன்றாக இருக்கும். அதோடு இறைச்சியும் இலகுவாகவும், சுவையாகவும் இருக்கும். இவ்வாறு உருவாக்கப் படும் ஆட்டினங்கள் பிராய்லர் போன்ற வகையைச் சேர்ந்ததா? என சிலர் கேட்கிறார்கள். தலைச்சேரி ஆடுகளும், சுரோகி ஆடுகளும் இந்த முறையில்தான் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.இப்போது எங்களிடம் 60 தாய் ஆடு உள்பட 160 ஆடுகள் உள்ளன. கொட்டகையில் சினை ஆடு, குட்டி போட்ட தாய் ஆடு, வளரும் ஆடுகள் என தனித்தனியே கேபின் அமைத்து அடைத்து வைக்கிறோம். எல்லா ஆடுகளையும் ஒன்றாக அடைத்தால் ஒன்றோடு ஒன்று இடித்துக்கொண்டு சினை ஆடுகளுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் சினை கலையக்கூட வாய்ப்பு ஏற்படும். இதனைத் தவிர்க்கவே இவ்வாறு செய்கிறோம். குட்டி போட்ட தாய் ஆடுகளுடன் குட்டி ஆடுகளை விட்டுவிடுவோம். ஆடுகள் அடைக்கப்பட்டிருக்கும் கேபினுக்கு முன்பக்கம் தீவனத்திற்கென்று தனியாகவும், குடிநீருக்கென்று தனியாகவும் தொட்டிகள் அமைத்திருக்கிறோம். கேபினின் உள்பகுதியில் சிறிய கூண்டு போல அமைத்து, அதில் கடலைக்கொடியைப்போட்டு விடுவோம்.

வேண்டும் என்கிறபோது கடலைக்கொடியை ஆடுகள் தின்றுகொள்ளும். காலையில் 7 மணிக்கு மக்காச்சோளம், தேங்காய் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு, அடர்தீவனம் ஆகியவற்றைக் கலந்து வைப்போம். 9.30 மணிக்கு பசுந்தீவனங்களை இயந்திரம் மூலம் அரைத்து வைப்போம். 11 மணிக்கு கடலைக்கொடியை நிறைத்து வைப்போம். பின்பு மாலை 6.30 மணிக்கு பசுந்தீவனம் கொடுப்போம். காலை, மதியம், இரவு என மூன்று வேளை குடிநீர் நிரப்புவோம். பிறந்த குட்டிகளை முதல் நாளிலேயே தாயிடம் பால் குடிக்கப் பழக்குவோம். குடிக்கத்தெரியாத குட்டிகளுக்கு 2ம் நாளில் புட்டிப்பால் கொடுப்போம். இதுபோல் 10 நாட்களுக்குக் கொடுப்போம். பின்பு அவை தாயிடம் பால் குடிக்க கற்றுக்கொள்ளும். 30 நாளில் இருந்து மெல்ல மெல்ல தீவனம் கொடுக்க ஆரம்பித்துவிடுவோம். ஆடுகளுக்கு பெரிய அளவில் நோய்கள் வராது. இருந்தபோதும் நாங்கள் ஆண்டுக்கு ஒருமுறை பிபிஆர் தடுப்பூசி போடுவோம். நோய்கள் வந்தால் கால்நடை மருத்துவர்கள் ஆலோசனையைக் கேட்டு மருந்துகள் கொடுப்போம்.

முறையாக தீவனம் கொடுத்து பராமரிப்பதன் மூலம் 4, 5 மாதங்களில் குட்டிகள் அனைத்தும் சராசரியாக 25 கிலோ எடைக்கு வந்துவிடும். அந்த சமயங்களில் குட்டிகளை விற்பனை செய்வோம். மாதத்திற்கு 10 முதல் 15 குட்டிகள் வரை விற்பனையாகும். ஒரு குட்டி சராசரியாக ரூ.15 ஆயிரத்திற்கு விலை போகும். ஆத்தூர், வாழப்பாடி, ராசிபுரம், எடப்பாடி, ஓமலூர், மேச்சேரி போன்ற ஊர்களில் இருந்து வியாபாரிகள் வந்து குட்டிகளை வாங்கிச் செல்கிறார்கள். சிலர் வளர்ப்புக்காகவும் குட்டிகளை வாங்கிச் செல்கிறார்கள். மாதத்திற்கு 10 குட்டிகள் விற்றால் கூட ஒன்றரை லட்ச ரூபாய் வருமானமாக கிடைக்கும். இதில் பராமரிப்பு, ஆட்கள் கூலி என ரூ.50 ஆயிரம் செலவாகும். இதுபோக மாதம் ஒரு லட்ச ரூபாய் லாபமாக கிடைக்கிறது. இன்ஜியரிங் படித்திருக்கிறேன், சட்டமும் படித்திருக்கிறேன். அது சார்ந்த பணிக்கு போகலாம். ஆனால் இந்த ஆடு வளர்ப்புத்தொழில்தான் எனக்கு நிறைவாக இருக்கிறது. ஆடு வளர்க்கும் விவசாயி என்பதுதான் எனக்கு பெருமையாக இருக்கிறது. இப்போது வேலையில்லாமல் இருப்பவர்கள், வேலை தேடும் இளைஞர்களுக்கு ஆடு வளர்ப்புத் தொழில் நல்ல சாய்ஸ். இதில் கண்டிப்பாக ஜெயிக்கலாம்! ” என நம்பிக்கையுடன் பேசி முடித்தார் லோகேஷ்வரன்.

தொடர்புக்கு:
லோகேஷ்வரன்: 98947-03318

ஒரு கிலோ கறி ரூ.500

தமிழகத்தில் ஆட்டு இறைச்சிக்கு எப்போதும் மவுசு உண்டு. ஞாயிற்றுக்கிழமை வந்தால் ஆட்டு இறைச்சிக்கு டிமாண்ட் கூடும். ஆனால் தமிழ்நாட்டில் வளர்க்கப்படும் ஆடுகள் மூலம் 30 சதவீதம் மட்டுமே இறைச்சி கிடைக்கிறது. மீதி 70 சதவீதம் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் ஆடு, இறைச்சி மூலமே கிடைக்கிறது. இதற்காக வாகன வாடகை, இடைத்தரகர்களுக்கான கமிஷன் என பல செலவுகள் ஆகிறது. இதையெல்லாம் கணக்கில் வைத்துத்தான் ஆட்டு இறைச்சி விலை நிர்ணயிக்கப்படுகிறது. இப்போது கிலோ ₹ 700, 800 என ஆட்டு இறைச்சி விற்கப்படுகிறது. இந்த நிலையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சியை ரூ.500க்கு கொடுக்க திட்டமிட்டு வருகிறார் லோகேஷ்வரன். இதற்காக நேரடி இறைச்சி விற்பனையில் இறங்க முடிவெடுத்திருக்கிறார். இதற்காக செல்போன் ஆப் ஒன்றை உருவாக்கி குறைந்த விலை ஆட்டு இறைச்சி கான்செப்ட்டை நடைமுறைப்படுத்த இருக்கிறார். இதை டோர் டெலிவரி செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்.

உரத்தின் மூலம் உபரி வருமானம்

கொட்டகையில் இருந்து கீழே விழும் கழிவுகள் மட்கி உரமாகி விடுகின்றன. இவற்றை 3 மாதங்களுக்கு ஒருமுறை உரமாக விற்பனை செய்துவிடுகிறார்கள். இதன்மூலம் ஆண்டுக்கு 12 டன் உரம் கிடைக்கிறது. இதை விவசாயிகள் வந்து வாங்கிச்செல்கிறார்கள். கேரளாவில் ஆட்டு உரம் அதிகளவில் தேவைப்படுகிறது. அங்குள்ள டீ, காப்பி எஸ்டேட்டுக்கு இதைப் பயன்படுத்துகிறார்கள். இந்த உரம் ஒரு டன் ரூ.4 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.48 ஆயிரம் வருமானம் பார்க்கிறார் லோகேஷ்வரன்.

தாய் ஆடுகளே அடித்தளம்

*ஆட்டுப்பண்ணைக்கு மிகவும் முக்கியமானது தாய்ஆடுகள். இந்த ஆடுகளை சிறந்த ஆடுகளாக கண்ெடடுத்து வாங்குவதுதான் தொழிலின் வெற்றிக்கு பலமான அடித்தளமாகும்.
*காற்றோட்டம் நிறைந்த இயற்கை சூழலும், தரமான தீவனங்களும் ஆட்டுக்குட்டிகளை நன்றாக வளர்த்தெடுக்க மிகவும் முக்கியம். இப்படி தனித்துவமான சூழலில் வளரும் குட்டிகளை எளிதில் எந்த நோயும் அண்டாது.
*தமிழகத்தில் ஆட்டு இறைச்சி மீதான ஆர்வம் பொதுமக்களிடம் அளவுக்கதிகமாக உள்ளது. இங்குள்ள பிரதான சந்தைகளில் நாள் ஒன்றுக்கு ₹2 கோடி வரையிலான ஆடு வியாபாரம் நடக்கிறது. பண்டிகை நாட்களில் இது ₹5 கோடி வரை செல்கிறது. இந்த வகையில் லாபம் ஈட்டும் சிறந்த தொழிலாக ஆடுவளர்ப்பு உள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி