வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 167 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் நிறைவு: டிசம்பர் 31ம் தேதி வரை பராமரிப்பு மற்றும் கண்காணிக்க திட்டம்


சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னிட்டு சென்னை உள்பட 5 மாவட்டங்களில் 167 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் நீர்வளத்துறை மூலம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பருவமழை தொடக்கத்திற்கு முன்னரே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பலி எண்ணிக்கையும் உயர்ந்தது. தென்னிந்தியாவிலும் பல்வேறு இடங்களில் மழை கொட்டித்தீர்த்தது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் குறைவான மழையே பெய்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை தொடர்ந்ததும் அதிக அளவு மழை பெய்யும் என்று கணிக்கப்படுகிறது. ஆகையால் பாதிப்பும் அதிகமாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டிலிருந்து இந்த பருவமழையில் தீவிரமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக 3 மாதங்கள் வரை நின்று பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் மொத்தமாக கொட்டிவிடுகிறது. இதனால் எதிர்ப்பாராத வெள்ளம் மற்றும் பாதிப்புகள், பொருள் இழப்பையும் ஏற்படுத்திவிடுகிறது. கடந்தாண்டு சென்னையில் பாதிப்புகள் ஏற்பட்டதைபோல தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை பருவமழையால் அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டது. ஓராண்டுக்கு பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்ததால் அந்த நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தூத்துக்குடியும், நெல்லையும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதுபோன்ற எந்த பாதிப்பும் இந்த முறை ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னேற்பாடுகள் நடவடிக்கைளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை மற்றும் அதைச்சுற்றிய பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் சீராக மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக கனமழை கொட்டிய நேரங்களிலும் வெள்ள நீர் விரைவாக வடிந்தது. பொதுவாக வடகிழக்கு பருவமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. எனவே பருவமழைக்கு முன்னதாக இந்த மாவட்டங்களில் உள்ள நீர்வழித்தடங்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு அதிகபட்சமாக₹20 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. ஆனால் இந்த நிதியில் போதியளவில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதனால் குடியிருப்புகள், சாலைகள் உள்ளிட்ட இடங்களில் தேங்கும் வெள்ளம் வடிவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.

எனவே கூடுதல் நிதியை ஒதுக்க ேவண்டும் என நீர்வளத்துறை வாயிலாக தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது. அதை ஏற்று இம்மாதம் 15ம் தேதிக்குள் மேல் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிக்கு₹35 கோடி அரசு கடந்த பிப்ரவரி மாதம் ஒதுக்கீடு செய்தது. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக நகரப்பகுதிகள் மற்றும் அதையொட்டி உள்ள புறநகர்ப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் இருந்து, ஆகாயத்தாமரை போன்ற நீர்வாழ் தாவரங்களை அகற்றுவதற்கு ஏதுவாக வருடாந்திர நடவடிக்கை பணிகளை நீர்வளத்துறை தொடங்கி முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இந்தாண்டு₹35 கோடியில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பருவமழை முடிவும் வரை மழை வெள்ள நீர் தொடர்ந்து தடையின்றி செல்வதை உறுதி செய்யும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது : ஏறத்தாழ 250 கிலோ மீட்டர் தூரம் வரையிலான பெரிய நீர்வழித்தடங்கள்மற்றும் அதன் உபரிப் பாதைகள், இதன் மூலம் சீரமைக்கப்படும். மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், ஏற்கெனவே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஓட்டோரி நீரோடை, விருகம்பாக்கம் – அரும்பாக்கம் கால்வாய் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை சுத்தம் செய்வதற்கான தனித்திட்டமாக₹3.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பாலாறு, கிருஷ்ணா குடிநீர் திட்டம், ஆரணியாறு, கொள்ளிடம், வெள்ளாறு வடிநிலங்களில் 167 இடங்களில் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட வெள்ள தடுப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகளை நிறைவடைந்தாலும் டிசம்பர் 31ம் தேதி வரை கண்காணிக்கப்பட்டு வரும். இவ்வாறு கூறினர்.

Related posts

இலங்கையில் அதானியின் காற்றாலை திட்டங்கள் மறு ஆய்வு :புதிய அரசின் அறிவிப்பால் அதானி குழுமம் அதிர்ச்சி!!

நாடு முழுவதும் 200 போலி நிறுவனங்களை உருவாக்கி ஜிஎஸ்டி மோசடி: குஜராத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் மகேஷ் லங்கா கைது

கும்மிடிப்பூண்டியில் 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் காவலர் கைது