பருவமழை சரிவர பெய்யாததால் வறண்டு கிடக்கும் பெரியகுளம் கண்மாய் : விவசாய பணிகள் பாதிப்பு

சிவகாசி: சிவகாசி பகுதியில் வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாததால் பெரியகுளம் கண்மாய் வறண்டது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சிவகாசி பெரியகுளம் கண்மாய் கடந்த பல ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடந்தது. இந்நிலையில் கடந்த முறை பெய்த கனமழையால் 20 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பியது. சிவகாசி நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகாசி மாநகராட்சி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்தது.

பெரியகுளம் கண்மாய் நீர்வரத்து கால்வாயை தூர்வார மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கண்மாயில் மியாவாக்கி காடுகள் உருவாக்கும் திட்டத்தில் பல ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. பெரியகுளம் கண்மாயை பாதுகாக்க சமூக ஆர்வலர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த கண்மாய் நிலத்தடி நீர் மட்டத்திற்கு ஆதாரமாக உள்ளது.

இந்நிலையில் இந்த முறை வடகிழக்கு பருவ மழை சிவகாசி பகுதியில் சரிவர பெய்யவில்லை. நீர் வரத்து குறைவாக இருந்ததால் முழு கொள்ளளவு நிரம்பவில்லை. இதன் பின்னர் கோடை வெயில் கடுமையாக இருந்ததால் கண்மாய் வேகமாக வற்ற தொடங்கியது. தற்போது நீர் முழுவதும் வற்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காலம் ெதாடங்கியுள்ளதால் கன மழை பெய்தால் மட்டுமே கண்மாய் நிரம்பும் வாய்ப்பு உள்ளது.

இதனிடையே சிவகாசி பெரியகுளம் கண்மாயில் அய்யப்பன் காலனி, அரசு மருத்துவமனை தெரு பகுதிகளின் வீட்டு கழிவு நீர் கலந்து வருகிறது. இதே போல் கட்டளைபட்டி ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதிகளின் கழிவு நீரும் கண்மாயில் கலக்கிறது. இதனால் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து விடும் சூழல் உள்ளது. கண்மாயில் கழிவு நீர் கலந்தால் நீர் மாசடையகூடும். எனவே மாநகராட்சி நிர்வாகம் பெரியகுளம் கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், சிவகாசி பெரியகுளம் கண்மாய் இப்பகுதி விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. தற்போது கண்மாய் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நல்ல மழை பெய்து கண்மாய் நிரம்பினால் மட்டுமே விவசாய பணிகள் சிறப்பாக நடைபெறும் என்று தெரிவித்தனர்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்