வடகனராவில் குரங்கு காய்ச்சலுக்கு பெண் பலி

வடகனரா: கர்நாடகாவின் வடகனரா மாவட்டத்தில் குரங்கு காய்ச்சல் எனப்படும் கியாசனூர் வன நோயால் (கேஎப்டி) வயதான பெண் இறந்த சம்பவம் நடந்துள்ளது. மாநிலத்தில் இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. சித்தாபூர் தாலுகாவில் உள்ள கூர்லகை கிராமத்தை சேர்ந்த 60 வயதுடைய பெண் குரங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு குரங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. சித்தாபூர் தாலுகாவில் மட்டும் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. 103 குரங்கு காய்ச்சல் பாதிக்கபட்டோர் உள்ள மாநிலத்தில், சிக்கமகளூரு, வடகனரா மற்றும் ஷிவமொக்கா மாவட்டங்களில் தலா ஒன்று, மற்றும் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், சமீபத்தில் நோய் பரவல் கவலையை ஏற்படுத்தியுள்ள மாநிலத்தின் மூன்று மாவட்டங்களின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார். தடுப்பூசி போடுவதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ICMR) மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தியது, மேலும் தடுப்பூசி விரைவில் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நோய் கண்டறியப்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குரங்கு காய்ச்சல் என்பது வைரஸ் ரத்தக்கசிவு நோயாகும், இது மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும் ஆபத்தானது. கேஎப்டி இன் அறிகுறிகள் திடீரென குளிர், காய்ச்சல் மற்றும் தலைவலி ஆகியவற்றுடன் தொடங்குகின்றன. வாந்தியுடன் கூடிய கடுமையான தசை வலி, இரைப்பை குடல் அறிகுறிகள் மற்றும் ரத்தப்போக்கு பிரச்னைகள் ஆரம்ப அறிகுறிகள் தோன்றிய மூன்று முதல் நான்கு நாட்களுக்கு பிறகு ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு