குரங்கம்மை சிகிச்சை.. 200 மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: குரங்கு அம்மைக்கு சிகிச்சை தொடர்பாக 200 மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே சமீபகாலமாக தென்பட்ட குரங்கு அம்மை நோய், இப்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இதையடுத்து இந்த தொற்றை, உலகளவில் பொது சுகாதார அவசர நிலையாக, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது. நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசத்திலும் குரங்கம்மை கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குரங்கு அம்மைக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வார்டை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; குரங்கு அம்மைக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக இன்று பயிற்சி கருத்தரங்கம் நடைபெறுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குரங்கு அம்மை சிகிச்சைக்காக வார்டு தொடங்கப்பட்டுள்ளது. குரங்கு அம்மைக்கு சிகிச்சை தொடர்பாக 200 மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை குரங்கம்மை நோய் கண்டறியப்படவில்லை.

மேலும், சர்வதேச விமான நிலையங்களில் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். குரங்கம்மை அறிகுறியுடன் யாராவது வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 நகரங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. 10 படுக்கைகளுடன் தொற்று நோயை தகுந்த பாதுகாப்புடன் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளுடன் இந்த வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களை கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு