மங்கோலியப் பேரரசன் செங்கிஸ்கான்!

செங்கிஸ்கான் என்ற பெயர் 800 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் அச்சத்தை விதைத்த பெயர். ஆசியாவில் தொடங்கி ஐரோப்பாக் கண்டம் வரை படையெடுத்துச் சென்று, பல தேசங்களைச் சூறையாடியவர். ஆசியாவின் மையத்தில் இருக்கும் மங்கோலியாவில் ஒரு நாடோடி இனக்குழுத் தலைவனின் மகனாகப் பிறந்து மற்ற இனங்களையும் இணைத்து ஒரு வலிமையான படையை உருவாக்கி, வெற்றிகளையும் தோல்விகளையும் சமமாகச் சந்தித்து வளர்ந்தவர் செங்கிஸ்கான். இவரின் இயற்பெயர் தெமுஜின். ஒரு கட்டத்தில் நிகரற்ற பேரரசனாக உருவெடுத்தார். பிரமாண்ட மாட்டு வண்டியில் – நகரும் கூடாரத்தில் – அமர்ந்து செங்கிஸ்கான் நடு நாயகமாக வர… வெடிமருந்துகளை வீசி எதிரியின் கோட்டைகளை நிலைகுலையச் செய்தும், வீழ்த்தும் சக்தி படைத்த படையை வைத்திருந்தவர். செங்கிஸ்கானைச் சூழ்ந்து குதிரைப்படையினர் எப்பொழுதும் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள். செங்கிஸ்கான் படையெடுத்து வருகிறார்’என்ற ஒற்றை வரித் தகவலே பல மன்னர்களை நடுங்கவைக்கும்.

அவர் உருவாக்கிய மங்கோலியப் பேரரசு அளவுக்கு இந்தப் பூமியின் பெருநிலப் பரப்பை வேறு எந்த இனமும் ஆண்டது இல்லை. அவரது போர்முறைகள் போலவே, மரணமும் மர்மங்களின் கலவை. அவர் எப்படி இறந்தார் என்பதிலிருந்தே மர்மம் தொடங்குகிறது. 1227-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி செங்கிஸ்கான் இறந்தார். அப்போது அவருக்கு வயது 65 என்று சிலர் சொல்கிறார்கள். முதுமையின் காரணமாக 72 வயதில் இறந்தார் என்றும் சொல்கிறார்கள். எந்த வயதில் இறந்தார், அவர் எப்படி இறந்தார் என்பதும் மர்மமாகவே உள்ளது. சீனாவின் மேற்கு ஜியா பேரரசோடு போர்புரிந்து வெற்றி பெற்றபோது, போரில் ஏற்பட்ட காயத்தால், யின்சுவான் என்ற இடத்தில் தன் குதிரையிலிருந்து கீழே விழுந்து இறந்தார் என்கிறார்கள். மங்கோலியர்களின் ரகசிய வரலாறு’எனும் பழைமையான நூல் வேட்டைக்குச் சென்றபோது ஏற்பட்ட காயத்தால் செங்கிஸ்கான் இறந்தார்’என்கிறது. வரலாற்றுப் புகழ்பெற்ற வெனிஸ் யாத்ரீகரான மார்க்கோ போலோ, ‘கடைசிப் போரின்போது செங்கிஸ் கான் உடலில் துளைத்த அம்பு ஒன்றினால் ஏற்பட்ட காயம் ஆறவே இல்லை.

அதில் நோய்த்தொற்று ஏற்பட்டு அவர் இறந்தார்’என எழுதியிருக்கிறார். இப்படிப் பலவித கருத்துகள் செங்கிஸ்கானின் மரணம் குறித்து சொல்லப்படுகிறது. மங்கோலியாவின் ஜியாங்கு மன்னர்களுக்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட கல்லறைகள் விநோதமானவை. தரைக்கு அடியில் 20 மீட்டர் ஆழத்தில் ஒரு குட்டி அரண்மனைபோல இதை அமைப்பார்கள். நடு நாயகமாக மன்னரின் உடல் வைக்கப்படும். அவர் அணிந்திருந்த நகைகள், பயன்படுத்திய பொருட்கள், பயணித்த தேர் எனச் சகலமும் அந்தக் கல்லறையில் வைக்கப்படும். அதன் பிறகு அதை மூடிவிட்டு, அந்தக் கல்லறை அமைந்த இடத்தில் தரைக்கு மேலே சதுரக்கற்களை வரிசையாக நட்டு வைப்பார்கள். இது அடையாளத்துக்காக. செங்கிஸ்கான் கல்லறையில் இந்த நடைமுறைகளை எல்லாம் செய்துவிட்டு, தரைக்கு வெளியில் சதுரக் கற்களை மட்டும் வைக்கவில்லை. அதனால்தான், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஜியாங்கு மன்னர்களின் கல்லறைகள் எல்லாம் கிடைத்துள்ளன. ஆனால் செங்கிஸ் கானின் கல்லறை கிடைக்கவில்லை என்பது மட்டும் நிஜம்.

– ஏ.பி.முருகானந்தம்

Related posts

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்

இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்!

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர் கமல்ஹாசன்: ம.நீ.ம. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றம்!