தினமும் 4 முறை மாற்றும் மோடியின் கோட் தான் பிரபலம்: மல்லிகார்ஜூன கார்கே தாக்கு

கலபுர்கி: தினமும் 4 முறை மாற்றும் பிரதமர் மோடியின் கோட் மட்டும் தான் பிரபலமடைந்துள்ளது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். கலபுர்கியில் நேற்று காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: காங்கிரஸ்காரர்கள் நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்த போது முக்கிய அரசு பதவிகளில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் வசதியாக அமர்ந்திருந்தனர். மகாத்மா காந்தி தனது வாழ்க்கையை அர்ப்பணித்து நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார். 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்துவிட்டது என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டே இருக்கிறார்.

70 ஆண்டுகளில் காங்கிரஸ் எதுவும் செய்திருக்காவிட்டால், நீங்கள் நாட்டின் பிரதமராக இருந்திருக்கமாட்டீர்கள். காந்தியால் அவர் அணிந்திருந்த தொப்பி பிரபலமானது. நேருவால் அவர் அணிந்திருந்த சட்டை பிரபலமானது. ஆனால் தினமும் நான்கு முறை மாற்றும் கோட் தான் மோடியால் பிரபலமடைந்துள்ளது. சிவப்பு, மஞ்சள், நீலம், காவி நிற கோட்டை அவர் தினமும் மாற்றுகிறார். அதை தற்போது ‘மோடி ஜாக்கெட்’ என்று அழைக்கின்றனர். நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் நல்லது செய்யுங்கள். ஆனால் காங்கிரசை அவதூறு செய்வதால் நாடு முன்னேற்றமடையாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதுமாறு காங்கிரஸ் அம்பேத்கரை கேட்டுக்கொண்டது.

அதில் வாக்கு உரிமை உள்பட மக்களுக்கு சம உரிமை அளிக்கப்பட்டுள்ளது. தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பஞ்சாயத்து தலைவராக, எம்எல்ஏ, எம்பியாக, அமைச்சர்களாக உருவாக காரணம் காங்கிரஸ் அளித்த அரசியல் அமைப்பு சட்டம் தான். ஆர்.எஸ்.எஸ் அல்லது பாஜ இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபடவில்லை. உங்களில் யாராவது சிறைக்கு சென்றதுண்டா?. அப்போது ஆர்எஸ்எஸ் தங்கள் செயல்வீரர்களுக்கு என்ன தகவல் கொடுத்தது தெரியுமா?. மற்றவர்கள் சுதந்திரத்துக்காக போராடட்டும். நமது செயல்வீரர்கள் அரசு வேலை பெறுவதில் கவனம் செலுத்துங்கள். இதனால் ஆர்எஸ்எஸ் விசுவாசிகள் ராணுவம் உள்ளிட்ட அரசு ேவலைகளில் நாடுமுழுவதும் அமர்ந்தனர். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

சாலையில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து: சென்னையில் பரபரப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது