சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் மோடி பங்கேற்பு; பல்வேறு தரப்பினரும் விமர்சனம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோவில், தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் அவரது மனைவி கல்பனா தாஸ் ஆகியோர் பிரதமர் மோடியை தங்களது வீட்டில் இருந்து வரவேற்பதைக் காணமுடிகிறது.

தொடர்ந்து, பிரதமர் மோடியும் அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகரை வழிபட்டார். அந்த இடத்தில் மேலும் சிலர் வழிபாடு செய்துகொண்டிருந்தனர். மோடி பூஜை செய்தபோது கடவுள் முன் கைகளை கூப்பியபடி தலைமை நீதிபதி சந்திரசூட் நின்றிருந்தார். இந்நிகழ்வில் பிரதமர் மோடி மகாராஷ்டிர பாரம்பரிய தொப்பியை அணிந்திருந்தார். இந்நிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் வீட்டிற்கு பிரதமர் மோடி நேரில் சென்று விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டதை, சிலர் விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சில தலைவர்களும் அரசியலுக்கு அப்பாற்பட்டு விமர்சித்து வருகின்றனர்.

நீதித்துறையில் இருப்பவர்கள் அரசியல் தலைவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பது, நீதித்துறையை சமரசம் செய்வது போன்றும், வீடுவரை சென்று நிகழ்வில் கலந்து கொள்வது ஏற்புடையது அல்ல என்றும் விமர்சித்து வருகின்றனர். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கடந்த 2022 நவம்பர் முதல் நாட்டின் 50வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இந்த ஆண்டு நவம்பர் வரை அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் நீடிப்பார். இவர் ஜம்மு காஷ்மீருக்கான 370வது பிரிவு, தேர்தல் பத்திரம் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி