மோடி பேச்சு சுத்த வேஸ்ட்: உமர் அப்துல்லா கேலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின், பிரதமர் மோடி முதன்முறையாக நேற்று முன்தினம் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றார். பிரதமர் மோடியின் ஜம்மு பயணம் பற்றி முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “ஜம்முவில் பிரதமர் மோடியின் பேச்சில் நான் புதிதாக எதையும் கேட்கவில்லை. ஏற்கனவே பேசிய விஷயங்கள் பற்றியே மோடி அதிகம் பேசினார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் தேர்தல் நடக்கவில்லை.

செப்டம்பர் 31ம் தேதிக்குள் பேரவை தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு எதையும் சொல்லவில்லை. மாநிலத்தின் முழு அந்தஸ்தை மீட்டெடுப்பது, வேலையில்லா ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது பற்றி மோடி பேசுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் எதைப்பற்றியும் அவர் பேசவில்லை. ஜனநாயகத்தை மீட்டெடுப்பது உள்ளிட்ட மக்கள் விரும்பும் எதைப்பற்றியும் அவர் பேசவில்லை.

இதையெல்லாம் எதிர்பார்த்திருந்த மக்களின் கனவு, நம்பிக்கைகளை மோடி தகர்த்து விட்டார். 370 பிரிவு ரத்தை காங்கிரசும், ஜம்முவில் உள்ள பிராந்திய கட்சிகளும் பயன்படுத்தி கொண்டன என்று மோடி பேசினார். நாங்கள் அதை எப்போது பயன்படுத்தி கொண்டோம். 370 பிரிவு ரத்தை அரசியல் ஆதாயத்துக்காக ஒரு கால்பந்தை போல் பாஜதான் பயன்படுத்தி வருகிறது. அப்படி இல்லையெனில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பற்றி புகழ்ந்து பேசி மோடி ஏன் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும்” என கேள்வி எழுப்பினார்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு