2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்று மோடி மீண்டும் ஒரு துக்ளக் தர்பாரை ஆரம்பித்து வைத்து இருக்கிறார்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்று பிரதமர் மோடி மீண்டும் ஒரு துக்ளக் தர்பாரை ஆரம்பித்து வைத்து இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 32வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரின் படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: பிரதமர் மோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றிருக்கிறார். திரும்பவும் ஒரு துக்ளக் தர்பாரை அவர் ஆரம்பித்து வைத்து இருக்கிறார். ஏற்கனவே நாணய மதிப்பிழப்பை கொண்டு வந்தார். அதனால் என்ன பயன் கிடைத்தது என்று அவருக்கும் தெரியாது. நாட்டு மக்களுக்கும் தெரியாது. இன்றைக்கு மீண்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மறைந்து போய் இருக்கிறது. ஒரு அரசாங்கம் என்பது ஒரு திட்டத்தை அறிவித்தால், அந்த திட்டம் எதற்காக அறிவிக்கப்பட்டது. அதனால் மக்களுக்கு என்ன கிடைக்கும்.

அரசின் கொள்கை என்ன என்பதை அவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும். ஆனால், பிரதமர் மோடி வாய் திறப்பதே இல்லை. எதற்காக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கொண்டு வந்தார்கள். எதற்காக இன்றைக்கு அவர்கள் திரும்ப பெற்றிருக்கிறார்கள் என்பதை அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் சொல்லாததும் நல்லது தான். ஏனென்றால் அவர்களின் புதைக்குழியை அவர்களே தோண்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்றார். இதில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வல்லபிரசாத், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்பி, செயல் தலைவர் செல்லக்குமார், விஜய் வசந்த் எம்பி, துணை தலைவர் கோபண்ணா, பொது செயலாளர்கள் தளபதி பாஸ்கர், சிரஞ்சீவி, பி.வி.தமிழ்செல்வன், மாவட்ட தலைவர்கள் எம்.பி.ரஞ்சன்குமார், சிவராஜசேகரன், முத்தழகன், அடையாறு துரை, டில்லிபாபு உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.

Related posts

பிரதமர் பதவியை இழக்கிறார் ரிஷி சுனக்: இங்கிலாந்தில் ஆட்சி அமைக்கிறது தொழிலாளர் கட்சி

காற்று மாசுபாட்டினால் பறிபோகும் உயிர்கள்

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை