மக்களவையில் இரண்டரை மணி நேரம் பேசினார் ராகுல் குற்றச்சாட்டுக்கு மோடி பதில்: மணிப்பூர், நீட் பிரச்னைகளை கிளப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு

புதுடெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி இரண்டரை மணி நேரம் பேசினார். அப்போது, மணிப்பூர், நீட் விவகாரங்களை கிளப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 2 நாட்கள் நடந்தது. இதில், மணிப்பூர் வன்முறை, நீட் முறைகேடு, ரயில் விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எம்பிக்கள் பேசினர்.

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 100 நிமிடங்கள் அனல் பறக்க பேசி, 10 ஆண்டாக விவாதத்தில் பங்கேற்காத பிரதமர் மோடியையே எழுந்து பதிலளிக்க வைத்தார். பல அமைச்சர்களையும் பதறச் செய்தார். ஆளும் பாஜ கூட்டணி அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நேற்று பதில் அளித்து பேசியதாவது:

எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டு, வாதப் பிரதிவாதங்களை முடித்துக் கொண்டு, கோஷமிட்டபடி இருப்பதுதான் பாஜ போட்டியாளர்கள் எடுத்துள்ள தீர்மானம். மக்களின் ஆணையை நேர்மையாக புரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். போலி வெற்றி கொண்டாட்டங்களுக்கு பின்னால் ஒளிந்து கொள்ளாமல், மக்கள் தீர்ப்பை ஏற்க வேண்டுமென காங்கிரசை நான் வலியுறுத்துகிறேன். நாட்டு மக்கள் ஒவ்வொரு விஷயத்திலும் எங்களை சோதித்த பின்னரே இந்த ஆணையை வழங்கியுள்ளனர்.

10 ஆண்டுகால எங்கள் சாதனையை மக்கள் பார்த்துள்ளனர். ‘பொது சேவையே கடவுள் சேவை’ என்ற தாரக மந்திரத்தை நிறைவேற்றி, ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டதை கவனித்துள்ளனர். ‘தேசம் முதல்’ என்பதே எங்களின் முதன்மை நோக்கம் என்பதை நாடு கண்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, நாங்கள் தொடர்ந்து சீர்திருத்தங்களைச் செய்து வருகிறோம். நாடு நீண்டகாலமாக சமாதான அரசியலை பார்த்தது. அது நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தியது. நாங்கள் சமாதான அரசியலை நம்பவில்லை.

யாருடனும் சமரசமில்லாமல் அனைவருக்கும் நீதி வழங்கும் கொள்கையை கொண்டுள்ளோம். அதனால்தான் மீண்டும் 3வது முறையாக எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த தேர்தல் 140 கோடி மக்களின் முதிர்ச்சியை காட்டுகிறது. இதில், சிலரின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எவ்வளவுதான் பொய் சொன்னாலும் அவர்கள் ஒட்டுமொத்தமாக தோற்கடிக்கப்பட்டுள்ளனர். எங்களது 3வது பதவிக்காலத்தில், 3 மடங்கு வேகத்தில் வேலை செய்வோம். 3 மடங்கு பலத்தை சேர்ப்போம். 3 மடங்கு முடிவுகளை உறுதி செய்வோம்.

அதே சமயம், காங்கிரஸ் வரலாற்றில் தொடர்ந்து 3 முறை 100 இடங்களை தாண்டாதது இதுவே முதல் முறை. அவர்களுக்கு இது 3வது பெரிய தோல்வி. இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு சுயபரிசோதனை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதற்கு மாறாக அவர்கள் கர்வத்துடன் உள்ளனர். எங்களை தோற்கடித்து விட்டதாக பொய்யான கதையை மக்கள் மனதில் உருவாக்க முயற்சிக்கின்றனர்.
2014ல் நாங்கள் வெற்றி பெற்றபோது, ‘ஊழலைப் பொறுத்துக் கொள்ளாதீர்கள்’ என முழக்கமிட்டோம்.

அப்போது ஊழல்களால் மக்கள் நம்பிக்கை இழந்திருந்தனர். நம்பிக்கை இல்லாதபோது, மனிதனும், நாடும் எழுந்து நிற்பது கடினம். இந்த நாடு எதையும் சாதிக்க முடியாது என்று சாமானியர்கள் கூறினர். ஊழல் செய்திகள் மட்டுமே மேலோங்கின ஊழலால் தத்தளித்து குழியில் தள்ளப்பட்டிருந்த சாமானியர்கள், ஊழலுக்கு எதிராக சகிப்புத்தன்மை இல்லாத எங்களை ஆசீர்வதித்தில் பெருமைப்படுகிறேன். அவர்கள் விருப்பப்படியே, இப்போது தேசத்தின் கவுரவம் அதிகரித்துள்ளதோடு, உலக நாடுகளும் இந்தியாவை உற்று நோக்குகின்றன.

அனுதாபத்திற்காக புதிய நாடகம் தொடங்கியிருக்கும் ராகுல் காந்தி மீது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி வழக்கு இருக்கிறது. அவர் செய்த தவறுகளை வெளிப்படுத்தாமல், அனுதாபம் பெற முயன்ற சிறுபிள்ளைத்தனமான புத்தி கொண்டவரின் புலம்பலை இந்த சபை நேரில் பார்த்தது. ராகுல் தற்போது ஜாமீனில் உள்ளார். ஓபிசி மக்களை திருடர்கள் என்று கூறியதற்காக தண்டிக்கப்பட்டுள்ளார். தனது பொறுப்பற்ற பேச்சுக்களுக்காக உச்ச நீதிமன்றத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென்ற உண்மை அவர்களுக்கும் தெரியும்.

அக்னிபாதை திட்டம் மற்றும் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக பொய்கள் பேசப்பட்டன. ராகுல் காந்தி போன்ற அனுபவமுள்ள தலைவர்கள் இந்த அராஜகத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது, தேசம் சிக்கலை நோக்கிச் செல்கிறது என்பதைக் காட்டுகிறது. நாட்டில் பொருளாதார அராஜகத்தை உருவாக்கும் நோக்கில் காங்கிரஸ் செயல்படுகிறது. நாட்டைக் கலவரத்திற்குள் தள்ளும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்த அவையில் சபாநாயகர் எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டே சகித்துக்கொள்கிறீர்கள். ஆனால் திங்கட்கிழமை இங்கு நடந்த சம்பவத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும், இல்லையெனில் அது நாடாளுமன்றத்திற்கு நல்லதல்ல. இதுபோன்ற முயற்சிகளை சிறுபிள்ளைத்தனமான புத்தி என்று சொல்லி புறக்கணிக்கக் கூடாது. இது ஒரு ஆழமான சதி. சிறுபிள்ளைத்தனமான புத்திக்கு அந்த கடவுள் நல்ல புத்தியை தரட்டும். காங்கிரஸ் 100க்கு 99 இடங்களைப் பிடிக்கவில்லை. 543 இடங்களில் வெறும் 99 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது என்பதை முதலில் பாலகன் (ராகுல்) புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி சுமார் இரண்டரை மணி நேரம் பேசினார். பிரதமர் மோடி பேசத் தொடங்கியதுமே, ‘மணிப்பூருக்கு நீதி வேண்டும்’ என எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். ‘கொல்லாதே, கொல்லாதே, ஜனநாயகத்தை கொல்லாதே’ என தமிழ்நாடு எம்பிக்கள் முழக்கமிட்டனர். நீட் விவகாரம் குறித்தும் பல்வேறு எம்பிக்கள் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. கடும் கூச்சலுக்கு மத்தியிலேயே பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி பேசுவதற்கு முன்பாக மணிப்பூரை சேர்ந்த எம்பி ஒருவரை பேச அனுமதிக்குமாறு எதிர்க்கட்சிகள் தரப்பில் சபாநாயகரிடம் வலியுறுத்தப்பட்டது.

ஏற்கனவே மணிப்பூரை சேர்ந்த 2 எம்பிக்களில் ஒருவர் பேசி முடித்து விட்டார் என்பதால் சபாநாயகர் வாய்ப்பளிக்க மறுத்து விட்டார். இதை கண்டித்து அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி செய்தனர். ஜனாதிபதி உரையிலும், பிரதமர் மோடியின் பதிலிலும் மணிப்பூர் வன்முறை தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாகவும் ஒருவார்த்தை கூட பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி பேசி முடித்ததும், எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டு இடையூறு செய்ததை கண்டித்து ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தீர்மானம் கொண்டு வந்தார். அதை அமித்ஷா வழிமொழிய குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

* வினாத்தாள் கசிவை தடுக்க போர்க்கால நடவடிக்கை
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதுதொடர்பாக நேற்று பேசிய மோடி, ‘‘ஜனாதிபதி உரையில் வினாத்தாள் கசிவுகள் குறித்து கவலை தெரிவித்திருந்தார். இதுபோன்ற சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்பதை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை விட்டுவைக்க முடியாது. நீட் விவகாரத்தில் நாடு முழுவதும் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசு ஏற்கனவே கடுமையான சட்டங்களை வகுத்துள்ளது. முழு தேர்வு முறையை வலுப்படுத்த முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’’ என்றார்.

* நீட் விவாதம் கேட்டதால் மக்களவை ஒத்திவைப்பு
பிரதமர் மோடி பதிலளித்து முடித்ததைத் தொடர்ந்து, மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதில் அளிக்க உள்ளார். நீட் விவகாரம் தொடர்பாக மக்களவையில் இன்று விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார். இதுதொடர்பாக விவாதம் நடத்த அனுமதிப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லாவும் உறுதி அளித்திருந்தார். ஆனால், மக்களவை ஒருநாள் முன்பாக நேற்று ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

விசிக பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை: ஆட்டோ டிரைவர் கைது

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மிரட்டி பணம் பறிப்பு; போலி ஐ.டி அதிகாரிகள் கும்பல் கைது

திருப்பத்தூர் அருகே கணவரின் தகாத உறவால் குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது: ராணுவ வீரரிடம் போலீசார் விசாரணை