மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு எதையுமே செய்யவில்லை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஈரோடு: மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு எதையுமே செய்யவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ்-ஐ ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை மோடி அரசு கடுமையாக உயர்த்திவிட்டது. கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி என்னவானது? மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று முதலமைச்சர் ஆனவர் மு.க.ஸ்டாலின். பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

கலைஞர் வழியில் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினும் சொல்வதை செய்வார், செய்வதைத்தான் சொல்வார். திமுக ஆட்சிக்கு வந்ததும், பெட்ரோல் விலை ரூ.3 குறைக்கப்பட்டது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும். சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சரான பிறகு அவரையே யார் என கேட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் அடகு வைத்தவர் பழனிசாமி. தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழைய முந்தைய அதிமுக அரசே காரணம்.

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர். காலை உணவுத் திட்டத்தின் கீழ் 18 லட்சம் மாணவ, மாணவிகள் பலனடைகின்றனர். காலை உணவுத் திட்டம், பிற மாநிலங்களிலும், கனடா நாட்டிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகத்திற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 4 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. தகுதியுடைய பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.18 கோடி பெண்கள் பலனடைந்து வருகின்றனர்.

மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு எதையுமே செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு இதுவரை ஒருபைசா கூட வெள்ள நிவாரணம் வழங்கவில்லை. தமிழ்நாட்டிற்கு புயல்-மழை நிவாரணம் வழங்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு வஞ்சித்து வருகிறது. பி.எம்.கேர்ஸ் நிதிக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு இதுவரை கணக்கு காட்டவில்லை. ஜிஎஸ்டி நிதிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு 29 பைசா, உ.பி.க்கு ரூ.3, பீகாருக்கு ரூ.7. ஜிஎஸ்டி நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது மோடி அரசு. வாக்காளர்கள் போடும் ஓட்டு.. மோடிக்கு வைக்கும் வேட்டு இவ்வாறு கூறினார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்