எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்ல.. நேரடியாக கடவுளுடன் உரையாற்றுபவர் மோடி: சிவப்பெருமான் படத்தைக் காட்டி ராகுல் காந்தி பேச்சு

டெல்லி : மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,”கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அரசியலமைப்பு மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. பழங்குடியினர், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தியா என்பதற்கான கருத்தியலே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. எதிர்கட்சித் தலைவர்கள் பலரும் சிறையில் உள்ளனர்; நானும் தாக்குதலுக்கு உள்ளானேன். அமலாக்கத்துறை 55 மணி நேரம் என்னிடம் நடத்திய தொடர் விசாரணையை ரசித்தேன். 20க்கும் மேற்பட்ட வழக்குகள், 2 ஆண்டுகள் சிறை, என்னுடைய வீடு பறிக்கப்பட்டது,” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து சிவப்பெருமான் படத்தைக் காட்டி ராகுல் காந்தி பேசிய போது. இப்படி கடவுள் புகைப்படங்களைக் காட்டு வருவது அரசியல் சாசன விதிமீறல் என சபாநாயகர் குறிப்பிட்டார். அவையில் சிவபெருமான் படத்தைக் காட்டக்கூடாதா? என கேள்வி எழுப்பிய ராகுல் காந்திக்கு, எந்தவொரு பதாகையையும் காட்டக் கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தல் வழங்கினார். ஆனாலும் சபாநாயகரின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இஸ்லாமிய மதச் சின்னம், குருநானக் புகைப்படத்தை காட்டி ராகுல் காந்தி பேசினார். மேலும் பேசிய ராகுல் காந்தி, “சிவனின் கை முத்திரைதான் காங்கிரஸ் கட்சியின் சின்னமாக உள்ளது. உண்மையையும், அகிம்சையையும் உலகிற்கு எடுத்துரைக்கிறது சிவனின் முத்திரை. எதிர்க்கட்சியாக இருப்பதும் எங்களுக்கு பெருமையே. அகிம்சையை வலியுறுத்தவே சிவனின் இடப்புறம் திரிசூலம் உள்ளது. சிவபெருமான் கழுத்தில் உள்ள பாம்பு போலத்தான் அச்சமின்றி எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் செயல்படுகிறோம்,” இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி,” எதிர்கட்சிகளை திட்டமிட்டு மோடி அரசு பழிவாங்குகிறது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்ல. பாஜகவினருக்கு அதிகாரம் மட்டுமே குறிக்கோளாக உள்ளது.பிரதமர் மோடி கடவுளுடன் நேரடித் தொடர்பில் இருப்பதாகவும் கடவுளுடன் நேருக்கு நேர் பேசிக் கொண்டு இருக்கிறார். கடவுளின் அவதாரமான பிரதமர் மோடி, காந்தி இறந்துவிட்டதாகவும், ஆவணப் படம் மூலமே அவரை உலகம் அறிந்ததாகவும் கூறுகிறார். மோடி வேண்டுமானால் ஆவணப்படம் மூலம் காந்தியை அறிந்திருக்கலாம். இந்தியா என்பது மூன்று அடிப்படை அம்சங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. சகிப்புத்தன்மை உள்ளிட்ட மூன்று அம்சங்கள் மீது இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்து தர்மத்தை கூட பாஜக பின்பற்றுவது இல்லை. ஒட்டுமொத்த இந்துக்களும் பாஜகவோ, மோடியோ பிரதிநிதிகள் அல்ல.,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

உலகக்கோப்பையுடன் தாயகம் புறப்பட்ட இந்திய வீரர்கள்!!

யூரோ கோப்பை கால்பந்து: ஆஸ்திரியாவை வீழ்த்தி கால் இறுதிக்கு துருக்கி தகுதி

அமாவாசை, வார இறுதியையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை தகவல்