மோடியின் வெறுப்பு பேச்சுக்களால் பிரதமர் பதவிக்கே இழுக்கு: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் தாக்கு

புதுடெல்லி: மோடியின் வெறுப்பு பேச்சுக்களால் பிரதமர் பதவிக்கே இழுக்கு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2004 முதல் 2014 வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தற்போது வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். கடந்த மாதம் ராஜஸ்தான், பன்ஸ்வாராவில் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி, 2006ம் ஆண்டின் போது, நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை இருக்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாக குற்றம் சாட்டியிருந்தார்.

பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மக்களவைக்கு 6 கட்ட தேர்தல் முடிந்து நாளை கடைசி கட்ட தேர்தல் நடக்க உள்ள நிலையில் மோடியின் ராஜஸ்தான் பேச்சுக்கு மன்மோகன் சிங் பதிலடி கொடுத்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்த மாநில மக்களுக்கு மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்து ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அன்பு, அமைதி, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள்.

காங்கிரஸ் கட்சியால் மட்டுமே வளர்ச்சி அடிப்படையிலான, எதிர்காலத்தை உருவாக்கி அதில், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாக்க முடியும். கடந்த காலத்தில் எந்தவொரு பிரதமரும் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சியையோ குறிவைக்கும் வகையில் இதுபோன்ற வெறுக்கத்தக்க, நாடாளுமன்ற மரபுகளை மீறும் வகையிலும், முரட்டுத்தனமான சொற்களை உச்சரித்தது இல்லை.

தேர்தல் பிரசாரத்தின் போது, மோடி மிகவும் மோசமான வெறுப்பு பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார். அவை முற்றிலும் பிரிவினையை ஏற்படுத்தும். தரம் தாழ்ந்த, கண்ணியம் குறைந்த பேச்சால் பிரதமர் பதவியின் மாண்பை குறைத்த முதல் பிரதமர், மோடி ஆவார். மோடியின் வெறுப்பு பேச்சுக்களால் பிரதமர் பதவிக்கே இழுக்கு. என்னை பற்றியும் பொய்யான தகவல்களை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். நான் என் வாழ்நாளில் ஒரு சமூகத்திலிருந்து மற்ற சமூகத்தை தனித்து பார்த்ததில்லை.

அப்படி ஒரு சமூகத்தை பிரித்து பார்ப்பதற்கு காப்புரிமை வாங்கி வைத்துள்ள ஒரே கட்சி பாஜ. பாஜ ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சீரழிந்து உள்ளது. பணமதிப்பிழப்பு என்னும் பேரழிவு, குறைபாடுள்ள ஜிஎஸ்டி, கொரோனா தொற்றின் போது அமலில் இருந்த வலிமிகுந்த தவறான நிர்வாகம் ஆகியவை பரிதாபகரமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளன. இதற்கு முன் இல்லாத அளவுக்கான வேலையின்மை, கட்டுப்பாடற்ற பணவீக்கம் ஆகியவை 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சமத்துவமின்மையை அதிகரித்திருக்கிறது.

பாஜ அரசின் தவறான ஆட்சியால் குடும்ப சேமிப்புகள் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டன. 30 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. நாட்டின் ஜிடிபி ஆறு முதல் ஏழு சதவீதம் வரை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு புதிய இயல்பானதாக மாறியுள்ளது. பாஜ அரசின் கீழ் சராசரி ஜிடிபி வளர்ச்சி ஆறு சதவீதத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அது சுமார் எட்டு சதவீதமாக இருந்தது . முன்னெப்போதும் இல்லாத வேலையின்மை மற்றும் கட்டுப்பாடற்ற பணவீக்கம் ஆகியவை சமத்துவமின்மையை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளன,

அக்னி வீரர் திட்டத்தை அமல்படுத்தியதன் மூலம், பாஜ கட்சி தேசபக்தி, வீரம் மற்றும் சேவையின் மதிப்பு வெறும் 4 ஆண்டுகள்தான் என்று மதிப்பிட்டுள்ளது. இது பாஜவின் போலி தேசியவாதத்தை காட்டுகிறது. ஆயுதப்படை மூலம் தாய்நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்று கனவு காணும் பஞ்சாப் இளைஞர்கள், இப்போது 4 ஆண்டுகளுக்கு மட்டுமே பணியமர்த்தப்படுவதைப் பற்றி ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கிறார்கள். அக்னிவீர் திட்டம் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் பஞ்சாப், பஞ்சாபியர்களை பழிவாங்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்தன. இதையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது இப்போது உச்சத்தை எட்டியுள்ளது. இந்த முரண்பாடு சக்திகளிடமிருந்து நமது அன்பான தேசத்தை காப்பாற்றுவதே இப்போது நமது கடமை. பஞ்சாப் மக்களின் தியாக உணர்வை அனைவரும் அறிவர். நாட்டில் சர்வாதிகாரத்தை ஏற்படுத்த துடிக்கும் ஆட்சியிடம் இருந்து நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பதற்கான கடைசி வாய்ப்பாகும் இது என குறிப்பிட்டுள்ளார்.

* மோடி ஆட்சியில் விவசாயிகளின் ஒரு நாள் வருமானம் ரூ.27 மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாக பிரதமர் மோடி முன்பு கூறினார்.கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாய் குறைந்தே இருக்கிறது. டெல்லியின் எல்லையில் பஞ்சாபைச் சேர்ந்த 750 விவசாயிகள் பல மாதங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தனர். சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தியவர்களை நோக்கி லத்திகளும் ரப்பர் தோட்டாக்களும் பாய்ந்தது.

இது போதாதென்று, விவசாயிகள் குறித்து மோடி மோசமாக பேசினார். அவர்களை ஒட்டுண்ணிகள்,போராட்டஜீவிகள் என்று கூறினார். தேசிய அளவில் விவசாயியின் ஒரு நாள் வருமானம் ரூ.27. ஆனால் அவர்களுடைய சராசரி கடன் ரூ.27 ஆயிரம். விவசாய பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் மற்றும் உரங்களுக்கு அதிக விலை மற்றும் விவசாயம் சார்ந்த கருவிகள் மீதான ஜிஎஸ்டி வரி ஆகியவற்றினால் அவர்களின் சேமிப்பு கடுமையாக குறைந்து விட்டது.

காங்கிரஸ் கூட்டணி அரசின் போது 3.73 கோடி விவசாயிகளுக்கு ரூ.72 ஆயிரம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. விவசாயிகளின் மிகப்பெரிய கோரிக்கைகளில் ஒன்றான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாயத்திற்கான நிலையான இறக்குமதி-ஏற்றுமதி கொள்கை, அத்துடன் கடன் தள்ளுபடி ஆகியவற்றுக்கு காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை

சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீசார் கூண்டோடு மாற்றம்

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்