குஜராத்-ல் முன்பு நடந்தது போல இப்போது மணிப்பூரில் நடக்கிறது; சேதுசமுத்திர திட்டத்தை முடக்கிய மோடி அரசு: டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

டெல்லி: குஜராத்-ல் நடந்தது போல இப்போது மணிப்பூரில் நடக்கிறது என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பேசிய திமுக எம்.பி.டி.ஆர்.பாலு; நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி ஏன் மக்களவைக்கு வரவில்லை; மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமரை பேச வைக்கவே நம்பிக்கை இல்லா தீர்மானம்.

தீமைகளை அழிக்க வேண்டும் என்பதற்காகவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது. நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடியை வர வைக்க வேறு வழி இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீமைகளை அழிக்க வேண்டும் என்பதற்காகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரக்கமின்றி 143 சிறுபான்மையினர் கொல்லப்பட்டுள்ளனர். 65,000 பேர் மாநிலத்தை விட்டு வெளியேறியுள்ளனர். மணிப்பூர் முதல்வரால் எதுவும் செய்யமுடியவில்லை; பிரதமர் நாடாளுமன்றத்துக்கும் வரவில்லை, மாநிலத்துக்கும் செல்லவில்லை. ரூ.15 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் ஒன்றிய அரசு, மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2000 கோடி கூட ஒதுக்க முடியவில்லை.

மிக உன்னத திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை தற்போது வரை முடக்கிவைத்திருக்கிறது மோடி அரசு. சோனியா காந்தி, மன்மோகன் சிங், கலைஞர் ஆகியோரின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதாலேயே முடக்கப்பட்டது. ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட பல நிபந்தனைகளை இலங்கை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. இதனை கருத்தில் கொள்ளாமல் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பதில் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது. சட்டமன்றம் நாடாளுமன்றத்தில், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு தவறிவிட்டது.

இலங்கை அரசியல் சட்டத்தில் 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஒவ்வோருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவோம், வேலை வாய்ப்பு, உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும் திருக்குறள், திருவள்ளுவர் பற்றி பேசுகிறார். ஆனால் தமிழ்நாட்டிற்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் வேலையின்மை அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

பெரும்பான்மை மக்களை வைத்து சிறுபான்மையின மக்களின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. முன்பு குஜராத்-ல் நடந்தது போல இப்போது மணிப்பூரில் நடக்கிறது. உலக நாடுகள் பாராட்டிய, சேது சமுத்திரத்திட்டம் சங் பரிவார் அமைப்பால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கும் முன்பே ஆளுநர் அவையிலிருந்து வெளியேறியது வெட்கக்கேடானது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இதை கவனத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும், பெட்ரோல், டீசல் விலையை பாஜக அரசு குறைக்கவில்லை; வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் நரேந்திர மோடி அரசு நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

Related posts

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்