மடியில் கனம் இல்லை; வழியில் பயம் இல்லை மோடிக்கும், இ.டி.க்கும் பயப்பட மாட்டேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்

கள்ளக்குறிச்சி: மடியில் கனம் இல்லை-வழியில் பயம் இல்லை, மோடிக்கும், இ.டி.க்கும் பயப்பட மாட்டேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை மற்றும் மாடாம்பூண்டி கூட்டு சாலையில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஏற்றி வைத்தார். பின்னர் லா.கூடலூர் ஊராட்சி பகுதியில், கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் வடக்கு, மாவட்ட திமுக சார்பில் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இன்றைக்கு தமிழக ஆளுநர் ஊழல் ஒழிப்பு பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். அவரின் லட்சணம் உங்களுக்கு தெரியும். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க அனுமதி மறுக்கிறார். மிரட்டிதான் அதிமுகவை அடிமையாய் ஒன்றிய பாஜ அரசு வைத்திருக்கிறது. அதேபோல், திமுகவையும் அடிமையாக்க நினைக்கிறது ஒன்றிய பாஜ அரசு. மீண்டும், மீண்டும் சொல்கிறேன் பிரதமர் மோடி அவர்களே இங்கே தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பது எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர் செல்வமோ கிடையாது உங்களுக்கு அடிமையாக இருக்க, மாறாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பது தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இ.டி., ஐடி, சிபிஐ மிரட்ட வேண்டுமானால் வச்சுக்கலாம், ஆனா உங்க பம்மாத்து வேலை எல்லாம் திமுகவில் நடக்காது.

நேற்று கூட பாஜக தலைவர் ஒருவர் பேட்டி கொடுக்கிறார். சென்ற மாதம் செந்தில் பாலாஜி வீட்டில் நடந்த ரெய்டில் ஒன்றும் கிடைக்கவில்லை. இரண்டு நாட்களாக பொன்முடி வீட்டில் ரெய்டு நடந்துட்டு இருக்கு, அங்கேயும் ஒன்றும் கிடைக்கவில்லை. அடுத்த ரெய்டு உதயநிதி வீட்டில் நடக்க போகுது என கூறியிருக்கிறார். வாங்க.. என் அட்ரஸ் வேண்டுமா? நான் கொடுக்கிறன். உங்க ஈ.டிக்கு எல்லாம் பயப்பட நான் யாரு, நான் கலைஞர் பேரன், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மகன், நான் மோடிக்கும் பயப்பட மாட்டேன், உங்களது இ.டி.க்கும்பயப்பட மாட்டேன். எனக்கு மடியில் கனம் இல்லை, பொதுவா சொல்றேன், என்ன விட்ருங்க, திமுகவின் கிளை செயலாளரை கூட நீங்கள் பயமுறுத்த முடியாது’ என்றார்.

* புதுமைப்பெண் திட்டத்தில் பதிவு செய்த அனைத்து மாணவிகளுக்கும் உதவித்தொகை
கள்ளக்குறிச்சி ஏகேடி பள்ளி வளாகத்தில் நான் முதல்வன் திட்டம் குறித்து அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது அவர் பேசுகையில், ‘பள்ளி, கல்லூரி மாணவர்கள் வருங்காலத்தில் தொழில் முனைவோராகவும், தொழில் வல்லுனராகவும் உருவாக்கிட இத்திட்டம் உறுதுணையாக இருக்கும். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகள் நான் முதல்வன் திட்டத்துக்கு கல்லூரி ஒன்றுக்கு ரூ.70 லட்சம் வீதம் ரூ.21 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கைவினை பொருட்கள் செய்யும் தொழிலில் ஈடுபடும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5 கோடியில் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. மாணவர்களின் விளையாட்டு முறை கற்றலை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1 கோடி செலவில் 1000 பள்ளிகளில் விளையாட்டு முறை கற்றல் செயல்படுத்தப்படவுள்ளது என்றார்.மேலும் புதுமை பெண் திட்டத்தில் பதிவு செய்து யார் யாருக்கு உதவி தொகை வருகிறது, யார் யாருக்கு வரவில்லை என கேட்டறிந்தார். சில மாணவிகள் மட்டும் பணம் வழங்கப்படவில்லை என தெரிவித்தனர். பதிவு செய்த அனைத்து மாணவிகளுக்கும் புதுமை பெண் திட்டத்தின் கீழ் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என அமைச்சர் உறுதியளித்தார்.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை