ஒன்றிய பட்ஜெட் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் மோடி ஆலோசனை

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் வரும் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மக்களவை தேர்தல் நடக்க இருந்ததால், கடந்த பிப்ரவரி மாதம், 2024-25ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் (ஏப்ரல் முதல் மே வரையிலான காலகட்டத்திற்கு) தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்து 3வது முறையாக பாஜ கூட்டணி அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் வரும் 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இதில் வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு முடிவுகளை எதிர்பார்க்கலாம் என நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரையில் குறிப்பிட்டுள்ளார். இதனால் பட்ஜெட் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. பட்ஜெட் தயாரிப்பு பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து இறுதிகட்டத்தில் உள்ள நிலையில், பிரதமர் மோடி பல்வேறு பொருளாதார நிபுணர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திட்ட அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங்,

தலைமை பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன், பொருளாதார நிபுணர்கள் சுர்ஜித் பல்லா, அசோக் குலாட்டி, மூத்த வங்கியாளர் கே.வி.காமத் மற்றும் பல்வேறு துறைசார் வல்லுநர்கள், நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், பட்ஜெட் தொடர்பாக பொருளாதார நிபுணர்களின் கருத்துக்களை பிரதமர் மோடி கேட்டறிந்தார். மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவதால் அரசுக்கு ஏற்படும் சாதக பாதகங்களை நிபுணர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்கள், தொழில்துறை தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி உள்ளார். இந்த சந்திப்புகளில், மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும், சாமானிய மக்களுக்கு வரிச் சலுகைகள் வழங்க வேண்டுமென பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்தி உள்ளனர். பாஜவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இதுவரை 2 இடைக்கால பட்ஜெட் உட்பட 12 பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலும் சாமானிய மக்களுக்கு சாதகமாக பெரிய அளவில் எந்த அறிவிப்புகளும் இடம் பெற்றதில்லை. ஒவ்வொரு முறையும் ஒன்றிய பட்ஜெட்டானது மக்களுக்கு கடும் ஏமாற்றத்தையே தந்து வருகிறது. தற்போது ஒன்றியத்தில் பாஜ தனிப்பெரும்பான்மை பெறாமல் கூட்டணி தயவுடன் ஆட்சி அமைத்துள்ளதால், இம்முறை பட்ஜெட் அறிவிப்பில் மாற்றங்கள் இருக்கலாம் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. அன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.

* வரும் 23ம் தேதி 2024-25ம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.

* நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7வது பட்ஜெட் இது.

Related posts

வயநாடு நிலச்சரிவு சம்பவத்துக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்: பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

பெருங்களத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்..!!

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளுக்காக பஹத் பாசில், நஸ்ரியா ரூ.25 லட்சம் நிதியுதவி