பிரதமர் மோடியை பேச வைப்பதற்காக காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு ஏற்பு: மக்களவையில் விவாதிக்கும் தேதி பின்னர் அறிவிப்பு என சபாநாயகர் தகவல்

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை பேச வைப்பதற்கான இறுதி முயற்சியாக இந்தியா கூட்டணி கட்சிகள் மக்களவையில் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்தாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். மணிப்பூரில் மெய்டீஸ் மற்றும் குக்கி பழங்குடியினரிடையே கடந்த மே 3ம் தேதி ஏற்பட்ட வன்முறை இரண்டரை மாதமாக நீடிக்கிறது. இதில் 165 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பழங்குடியின பெண்களுக்கு எதிராக கூட்டு பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு கொடூரங்கள் அரங்கேறி உள்ளன. வெளி உலகிற்கு எந்த தகவலும் தெரியாமல் மறைக்கப்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இதுதொடர்பாக, பிரதமர் மோடி முதலில் விளக்கம் அளிக்க வேண்டுமெனவும், அதன் பிறகே அவை விவாதத்தில் பங்கேற்போம் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி தலைவர்கள் உறுதிபட தெரிவித்து வருகின்றனர். இதற்கு அரசு தரப்பில் சம்மதிக்காததால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை பேச வைக்க இறுதி முயற்சியாக, ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, அசாம் மாநில காங்கிரஸ் எம்பியும் காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத்தலைவருமான கவுரவ் கோகாய் நேற்று காலை 9.20 மணி அளவில் சபாநாயகர் அலுவலகத்தில் விதி 198ன் கீழ் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கினார். இதே போல, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி எம்பி நாம நாகேஷ்வர் ராவும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை வழங்கினார். மக்களவையில் காலையில் அமளியைத் தொடர்ந்து, பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியதும், சபாநாயகர் ஓம்பிர்லா, காங்கிரஸ் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து தெரிவித்தார். நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை ஏற்க குறைந்தது 50 எம்பிக்களின் ஆதரவு தேவை. எனவே ஆதரவு தெரிவிக்கும் எம்பிக்கள் இருக்கையில் இருந்து எழுந்து நிற்குமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.

அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் எழுந்து நின்று ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் விவாதத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். மேலும், அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கான தேதியை அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பாஜ அரசு வெற்றி பெறுவது நிச்சயம் என்றாலும், இந்த தீர்மானத்தின் மீது கட்டாயம் விவாதம் நடத்த வேண்டும். அதேபோல் பிரதமர் மோடியும் பதிலளிக்க வேண்டும். அப்போது மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி பிரதமரின் பதிலை பெறுவதே எதிர்க்கட்சிகளின் திட்டமாகும்.

28வது நம்பிக்கையில்லா தீர்மானம்
* நாடாளுமன்ற வரலாற்றில், மக்களவையில் ஒன்றிய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் 28வது நம்பிக்கையில்லா தீர்மானம் இது.
* முதன் முதலில் 1963 ஆகஸ்ட் மாதம் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு அரசுக்கு எதிராக சொந்த கட்சியை சேர்ந்த ஆச்சார்யா கிர்பலானி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார். 1962ம் ஆண்டு சீனாவுக்கு எதிரான போரில் இந்தியா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது.
* இதுவரை 1990ல் வி.பி.சிங் தலைமையிலான அரசு, 1997ல் தேவகவுடா தலைமையிலான அரசு, 1999ல் வாஜ்பாய் தலைமையிலான அரசு ஆகியவை நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து ஆட்சியை பறிகொடுத்துள்ளன.
* 1979ல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, விவாதம் நடத்தாமலேயே மொரார்ஜி தேசாய் பதவி விலகினார்.
* தற்போது மக்களவையில் 543 எம்பிக்களில் பாஜவுக்கு 330 எம்பிக்களும், இந்தியா கூட்டணிக்கு 160 எம்பிக்களும் உள்ளனர். இரு தரப்பையும் சாராத பிற கட்சிகளுக்கு 60 எம்பிக்கள் உள்ளனர். இதனால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பாஜ அரசு கவிழாது.

* பிரதமர் மோடியின் கணிப்பு வைரலானது
இதே போல, கடந்த 2019ம் ஆண்டில் எதிர்க்கட்சிகள் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. அப்போது விவாதத்தில் பங்கேற்று பதிலளித்த பிரதமர் மோடி, ‘‘2023ம் ஆண்டிலும் இதே போல மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வாய்ப்பு கிடைக்கும் வகையில் நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார். அவரது இந்த கணிப்பு குறித்த வீடியோ பதிவுகளை பாஜ எம்பிக்கள் பலர் சமூக வலைதளங்களில் பரப்பி நேற்று வைரலாக்கினர்.

* சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லை
மணிப்பூர் விவகாரத்தில் உண்மையை வெளிப்படுத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டுமென ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரசின் மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதற்கு பதிலளித்து அமித்ஷாவுக்கு கார்கே அனுப்பிய கடிதத்தில், ‘‘எதிர்க்கட்சிகளின் சாதகமான பதிலை எதிர்பார்த்து உணர்வுப்பூர்வமாக அமித்ஷா கடிதம் எழுதிய அதே நாளில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் கூட்டணியை ஆங்கிலேயர்களுடனும், தீவிரவாத அமைப்புகளுடனும் தொடர்புபடுத்தி பேசுகிறார். ஆளுங்கட்சியில் ஒருங்கிணைப்பே இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் திக்கற்று இருப்பதாக பிரதமர் மோடி விமர்சிக்கிறார். எனவே அரசின் சொல்லுக்கும், செயலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் உள்ளது. 84 நாட்களாக மணிப்பூரில் அமைதியின்மை நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் கோரிக்கை’’ என கூறி உள்ளார்.

Related posts

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு

குமரியில் கடல்நீர் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம்