மோடியின் 3வது ஆட்சிக்காலத்தில் வினாத்தாள் கசிவு, தீவிரவாத தாக்குதல், ரயில் விபத்துகள் அதிகரிப்பு: மாநிலங்களவையில் கார்கே விளாசல்

புதுடெல்லி: பிரதமரின் மூன்றாவது ஆட்சிகாலத்தில் வினாத்தாள் கசிவு, தீவிரவாத தாக்குதல், ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, ‘‘மக்களவை தேர்தலின்போது பிரதமர் மோடி கடந்த பத்து ஆண்டுகளில் நீங்கள் பார்த்தது வெறும் டிரைலர் தான். படம் இன்னும் வெளிவரவில்லை என்றார். பிரதமர் படம் எப்படி இருக்கும் என்று கடந்த ஒரு மாதத்தில் எங்களால் கற்பனை செய்ய முடிந்தது. வினாத்தாள் கசிவு, பல தேர்வுகள் ரத்து, ரயில் விபத்து, ஜம்மு மற்றும் காஷ்மீரில் 3 தீவிரவாத தாக்குதல்கள், ராமர் கோயிலில் கசிவு, 3 விமான நிலையங்களில் மேற்கூரை இடிந்தது, சுங்க வரி உயர்வு உள்ளிட்டவை ஆகியவை அரங்கேறியுள்ளது. சமீபத்தில் நடந்த வினாத்தாள் கசிவால் 30லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்ந்தால் மாணவர்கள் படிப்பதை நிறுத்திவிடுவார்கள். கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை காகித கசிவு நிகழ்ந்துள்ளது.குடியரசு தலைவரின் உரையானது நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை புறக்கணித்துள்ளது. அரசின் தோல்வியை மறைக்க முயற்சித்துள்ளது” என்றார். கார்கே பேசும்போது, பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது கூறிய கருத்துக்களை குறிப்பிட்டார். மேலும் சிறுபான்மையினரையும், பாகிஸ்தானையும் பிரதமர் எத்தனை முறை குறிப்பிட்டார் என்பதை காட்டும் புள்ளிவிவரங்களை தெரிவித்தார். மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ஆனால் கார்கேவின் பெரும்பாலான கருத்துக்களை அவை தலைவர் ஜகதீப் தன்கார் குறிப்பில் இருந்து நீக்கினார்.

Related posts

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்

டி20 ஆல்ரவுண்டர் தரவரிசை; ஹர்திக் பாண்டியா நம்பர் 1: முதல் இந்திய வீரராக சாதனை

பிரசந்தா பதவி விலக வேண்டும்; நேபாளி காங்கிரஸ் கோரிக்கை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பிரதமர் முடிவு?