திருமழிசை பேரூராட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை: கட்டுமான பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களிடம் தங்களது தொகுதியில் முக்கியமான 10 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றும் வகையில் மனுவாக வழங்கிடுமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆர்.கிருஷ்ணசாமி தனது தொகுதியில் 10 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையாக திருமழிசை பேரூராட்சியில் நவீன எரிவாயு தகன மேடையை அமைத்துத் தருமாறு மனு அளித்திருந்தார். அதில் திருமழிசை பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த 15 வார்டுகளிலும் மொத்தம் சுமார் 40 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருமழிசை பேரூராட்சி வேகமாக வளர்ந்து வரும் நகரமாக உள்ளதால் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் பிணங்களை உடனே எரியூட்டும் வகையில் நவீன எரிவாயு சகல மேடை அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறு 10 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையாக மனுவாக குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு உடனடியாக கலைஞர் நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க ரூ.1.5 கோடியை ஒதுக்கீடு செய்தார். இதனைத் தொடர்ந்து நவீன எரிவாயு தகன மேடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

விழாவிற்கு பேரூராட்சித் தலைவர் வடிவேலு, திமுக பேரூர் செயலாளர் முனுசாமி, துணைத் தலைவர் மகாதேவன் செயல் அலுவலர் மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவிற்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி ரூ.1.5 கோடி மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைப்பதற்கான கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இதில் பேரூர் நிர்வாகிகள் செல்வம், நாகதாஸ், வேந்தன், அருள், இளங்கோவன், சுரேந்தர், கங்காதரன் தரணி சங்கர், வேலு, சதீஷ், பாஸ்கர், ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பிரபல ரவுடி சி.டி. மணிக்கு கால் எலும்பு முறிவு; மருத்துவமனையில் அனுமதி!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு!

போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கிய இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் கைது!