வன்கொடுமை சட்டத்தில் கைதான எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் கோரி மனு

சென்னை: வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மர்லினா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜனவரி 25ம் தேதி தனிப்படை போலீசாரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட இருவரும், சென்னை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிப்ரவரி 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், பணிப்பெண்ணை துன்புறுத்தியதாகவும், தாக்கியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை.

தங்களது குடும்ப உறுப்பினர் போல பணிப்பெண்ணையும் நடத்தினோம். அவரை கல்லூரியில் சேர்த்து அதற்கான கட்டணத்தையும் நாங்களே செலுத்தினோம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.என்.கணேஷ், காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரின் ஜாமீன் மனுவுக்கு காவல்துறையும், பாதிக்கப்பட்ட பெண்ணும் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு