எழுத்துப் பிழையுடன் இருக்கும் பெயர் பலகை 15 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் எம்எல்ஏ அலுவலகம்

*மழைக்கு கூட ஓபிஎஸ் ஒதுங்குவதில்லை என புகார்

போடி போடியில் கடந்த 15 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி தமிழகத்தில் புகழ் பெற்ற விஐபி தொகுதியாக விளங்கி வருகிறது.எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்பு 1987ம் ஆண்டு போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக இரண்டாக உடைந்து இருந்ததால் புறா சின்னத்தில் நடிகை வெண்ணிறாடை நிர்மலாவும், அவரை எதிர்த்து முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா சேவல் சின்னத்திலும் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். அப்போது இருந்தே போடிநாயகனூர் சட்டமன்றத் தொகுதி நட்சத்திர தொகுதியாகவும் விஐபி தொகுதியாகவும் மாறியது. அதனை அடுத்து கடந்த 2004ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தங்கும் அலுவலகம் போடி சட்டமன்ற தொகுதிக்காக அலுவலகம் போடி தென்றல் நகரில் கட்டப்பட்டது.

போடி சட்டமன்ற தொகுதிக்குள் ஏற்படும் ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து புகார் மனு வழங்குவதும் தங்களின் குறைகளை கூறுவதற்கும் இந்த அலுவலகம் பெரிதும் பயன்பட்டு வந்தது. அதன்படி 2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையே பொதுமக்கள் இந்த அலுவலகம் சென்று அதிமுக ராமராஜ், திமுக லட்சுமணன் எம்.எல்.ஏக்களை நேரில் சந்தித்து குறைகளுக்கும், பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டுள்ளனர்.

2011ம் ஆண்டில் போடி எம்எல்ஏவாக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவரும் வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கமோ அல்லது சட்டமன்ற அலுவலகம் பக்கமோ செல்வது கிடையாது என மக்கள் கூறுகின்றனர். தற்போதும் 3வது முறையாக போடிநாயக்கனூர் சட்ட மன்ற உறுப்பினராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதிக்கு வருவதே கிடையாது. அவரது அலுவலகத்திற்கு சென்றால் பெரிய கேட்டுக் பூட்டப்பட்டிருக்கும், பொது மக்களின் பிரச்னைகள் தீர்வு காண்பதற்கும் தேவையான குறைகளை கலைவதற்கும் அவர் நேரில் சென்று பார்க்க முடியாது. தேடினாலும் கிடைக்க மாட்டார்.

மேலும் பொதுமக்கள் இன்னும் போடி எம்.எல்.ஏவை தேடி கொண்டு தான் இருக்கின்றனர். தொடர்ந்து தமிழ்நாட்டில் போடிநாயக்கனூர் சட்டமன்றத்தொகுதி நட்சத்திர மற்றும் விஐபி தொகுதியாக இன்னும் திகழ்ந்து வருகிறது. இதற்கிடையில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ் செல்வன் அடிக்கடி போடி தொகுதிக்கு வந்து போடி நகர் பகுதியிலும், ஒன்றிய கிராமப்புற பகுதிகளிலும் பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொண்டு சென்று நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் கட்டிடம் முறையாக பராமரிப்பு இல்லாமல் கிடப்பதாலும், யாரும் பயன்படுத்தாமல் இருப்பதாலும் அந்த பக்கம் யாரும் செல்வதில்லை.

இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சி கால கட்டத்தில், போடி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் அலுவலகம் முன் பக்கத்தில் பெயர் பலகையில் எழுத்துப்பிழையுடன், ‘சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்’ என்பதற்கு பதிலாக ‘சட்டமண்ற உறுப்பிணர் அலுவலகம்’ என எழுதப்பட்டுள்ளது. இந்தப் போடி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை போடி நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே பொதுமக்கள் பயன்படும் விதமாக சட்டமன்ற உறுப் பினர் நேரில் சந்திக்கும் விதமாக வருங்காலத்தில் இந்த சட்டமன்ற அலுவலகத்தை கட்டாயமாக செயல்படுத்த வேண்டும். பெயர் பலகையில் எழுத்துப்பிழையுடன் இருக்கும் வாசகத்தை திருத்தி எழுத வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related posts

காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 27 வாகனங்கள் உதிரி பாகங்கள் ஏலம்

தமிழ்நாடு ஊரகத் தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 3 அதிநவீன பரிசோதனை கூடங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!