பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது : ஒன்றிய அரசு அறிவிப்பு!!

டெல்லி : பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரையுலகினருக்கு ஒன்றிய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியான் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இந்த விருதினை பெற்றுள்ளார்கள். இந்த நிலையில், நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு ஒன்றிய அரசு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த இவருக்கு வயது 74.

கடந்த 1976-ம் ஆண்டு பெங்காலியில் வெளியான ‘மிரிகயா’ என்ற படத்தின் மூலம் மிதுன் சக்கரவர்த்தி சினிமா துறையில் அறிமுகமானார். அறிமுக படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்று திரும்பி பார்க்க வைத்தார். இந்தி, பெங்காலி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சந்தால், டிஸ்கோ டான்சர், கோல்மால், தாதா, டைகர் உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘யாகாவா ராயினும் நாகாக்க’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

சுவாமி விவேகானந்தா திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் எம்.பி.யாகவும் மிதுன் சக்கரவர்த்தி இருந்து வந்துள்ளார். பின்னர், சாரதா நிதி நிறுவன மோசடியில் சிக்கினார். அதை தொடர்ந்து எம்.பி- பதவியை மிதுன் சக்கரவர்த்தி ராஜினாமா செய்தார். கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். நடிகர் மிதுன் சக்கரவர்த்தி கடந்த ஜனவரி மாதம் குடியரசு தலைவரிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில், ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “மிதுன் சக்கரவர்த்தியின் குறிப்பிடத்தக்க சினிமாப் பயணம், பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கிறது! தாதாசாகேப் பால்கே தேர்வு குழு, மிதுன் சக்கரவர்த்திக்கு விருது வழங்க முடிவு செய்துள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமை அடைகிறேன். மிதுன் சக்ரவர்த்தி ஜி, இந்திய சினிமாவுக்கு ஆற்றிய முக்கிய பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்படுகிறது. மும்பையில், அக்டோபர் 8, 2024 அன்று நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விழாவில் இவ்விருது வழங்கப்பட உள்ளது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோவை குனியமுத்தூரில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் டேப் ஒட்டி நூதன முறையில் ரூ..30,000 திருட்டு

கிருஷ்ணகிரியில் மெட்ரோ பஜார் வணிக வளாகத்திற்கு சீல்

சுரண்டையில் கிரைண்டர் செயலி மூலம் வாலிபரை மிரட்டி பணம் பறித்த 9பேர் கைது